வெயிற்காலம் ஆரம்பித்து விட்டாலே, பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பலவிதமான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி, அவதியுறுவர். அதிலும் பச்சிளம் குழந்தைகளும், வளர் பருவ குழந்தைகளும் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். வெயிற்காலம் வந்தாலே, பெற்றோர்கள் குழந்தைகளை வெயிற்கால நோய்களிலிருந்து காக்க, மருத்துவ மனைக்கும், மருந்தகத்திற்கும் நடையாய் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
வெயிற்காலத்தில், ஏற்படும் நோய்கள் குறித்து, சரியான விழிப்புணர்வு இருந்தால், மேற்கொண்ட சூழ்நிலையைத் தடுக்கலாம். வெயிற்காலத்தில் ஏற்படும் நோய்களை பற்றி, இப்பதிப்பில் படித்தறியலாம்.
1. நீர்ப்போக்கு
அதிக வெப்பத்தால், வியர்வைப் போக்கு அதிகரித்து, குழந்தையின் உடலில் இருந்து அதிக நீர்ப்போக்கு ஏற்படுகிறது. இது அதிக காய்ச்சலை, குழந்தையின் உடலில் ஏற்படுத்தி விடுகிறது.
2. எரிச்சல்/எரிதல்
சூரியனின் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில், குழந்தைகளுக்கு உடலில் எரிச்சல் மற்றும் உடலெரிதல் ஏற்படுகிறது.
3. கொப்புளங்கள்
அதிக வெயிலால், குழந்தைகளின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு, அரிப்பை ஏற்படுத்தும். இவை குழந்தையின் உடலுக்கு எரிச்சலைத் தருகிறது. இதனால் குழந்தைகள் தொடர்ந்து தூக்கமில்லாது அழும் நிலை உருவாகிவிடுகிறது.
4. கொசு மூலம் பரவும் நோய்கள்..!
வெயிற்காலத்தில், காய்ச்சல் என்பது சாதனமாகவே குழந்தைகளில் ஏற்படும் ஒரு நோய். இந்த சமயங்களில், கொசு பரப்பும் காய்ச்சல் நோய்களான, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற வாழ்வை அச்சுறுத்தும் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
5. நீர் மூலம் பரவும் நோய்கள்..!
வெயிற்காலத்தில், தண்ணீரின் தேவை மிகவும் அதிகரிக்கும்; அதிக தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும். இச்சமயங்களில், தூய்மையற்ற தண்ணீரையோ அல்லது சுத்தமற்ற நீர் மூலத்தில் இருந்து பெறப்பட்ட தண்ணீரையோ குழந்தை அருந்தும் சூழல் ஏற்பட்டால், நீரால் பரவும் நோய்களான, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்றுப போக்கு போன்ற நோய்கள் குழந்தைகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு.
6. ஒவ்வாமை மற்றும் தடிப்புகள்..!
குழந்தைகளுக்கு, அதீத வெயில் காரணமாக, உடலில் ஒவ்வாமை மற்றும் தடிப்புகள் ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது.
ஆகையால், குழந்தைகளை வெயிற்காலத்தில், அதிக பாதுகாப்புடனும், நோய்த்தொற்று குழந்தையை அணுகாத வண்ணமும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனே மருத்துவரை அணுகவும்..!
