
குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பானி பூரியை மைதாவைத் தவிர்த்து, கோதுமை கொண்டு எப்படி செய்வது என பார்க்கலாமா..!!
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 100 கிராம், ரவை - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய் வற்றல் - 6, வெல்லம் - 10 கிராம், உருளைக்கிழங்கு - 2, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தனியா - ஒரு தேக்கரண்டி, சீரகம் - அரைத் தேக்கரண்டி, கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி, புதினா - சிறிது, எண்ணெய் - 250 கிராம், உப்பு - தேவையான அளவு
செய்முறை

பூரி தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு, மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக தேய்க்கவும். பானி பூரி மிகவும் சிறியதாகவும் ஒரே அளவுடனும் இருப்பது அவசியம்; இதற்கு ஏதாவது ஒரு மூடியை வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக செய்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்; பூரி நன்றாக உப்பி வரும் போது, அதனை எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
மசாலா செய்யும் முறை
குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து, அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்; பின் மற்றொரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும்; மிளகாய் வற்றல், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.
பானி செய்யும் முறை
புளிக்கரைசலில் மசாலா பொடி, புதினாவை அரைத்து அதன் சாறு எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்; பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து பின்னர் புளித்தண்ணீரை ஊற்றி மூன்றையும் சேர்த்துச் சாப்பிடவும்.
மிகவும் ருசியான பானி பூரி தயார்..!
