Link copied!
Sign in / Sign up
0
Shares

வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு ஏற்படும் 5 பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்...

பெற்றோராய் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோராய் இருந்தால் சொல்லவே வேண்டாம். தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு செல்பவராய் இருந்தால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள இரண்டு பேரின் ஒத்துழைப்பும் அவசியம். அத்துடன், நாள் முழுவதும் வேலை செய்து களைப்புடன் வீடு திரும்பும் போது, உங்கள் குழந்தையின் அழுகுரல் மேலும் உங்களை களைப்புற செய்யும். என்ன தான் நீங்கள் அவர்களுடன் நாள் முழுவதும் இருக்க விரும்பினாலும், வேலைக்கு செல்லும் காரணத்தால் அது நடக்காத காரியமாகும். மேலும், அவ்வப்போது உங்கள் துணையுடன் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள், இவற்றுடன் சேர்ந்து உங்கள் குழந்தையும் உங்களை சிரமப்படுத்தும் போது, உங்களுக்கு பைத்தியம் பிடித்ததை போல உணருவீர்கள்.

இந்த மாதிரி சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவ்வளவு எளிதாக உங்கள் வேலையையும் விட்டுவிட முடியாது. அதே சமயம் உங்கள் குழந்தையையும் உங்கள் குடும்பத்தையும் கவனிக்காமல் இருக்க முடியாது. இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பதே இதற்கான ஒரே வழி. உங்களது நிலைமை எங்களுக்கு நன்றாக புரிகிறது. கவலைப்படாதீர்கள். இதில் நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

இங்கே வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சந்திக்கும் பொதுவான 5 பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளை நீங்களும் சந்திக்கிறீர்களா என்பதை படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 வேலை நேரத்தில் குழந்தையை பற்றிய சிந்தனை

நம் குழந்தையை கவனித்துக்கொள்ள வேற்றுமனிதரிடம் ஒப்படைக்க நாம் மிகவும் தயங்குவோம், பயப்படுவோம் . மேலும், குழந்தையின் உணவுப்பழக்கம், அழுகை ஆகியவற்றை மற்றவர்களால் சமாளிக்க முடியுமா என்று யோசிப்போம். அதிலும், குழந்தையை கவனித்துக்கொள்ளும் மையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பொறுப்பானவர்களா? ஒரே சமயத்தில் பல குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதால் என் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்வார்களா? இது போன்ற பல ஐயங்கள் உங்கள் மனதில் எழும்.

கவலைப்படாதீர்கள். உங்களால் உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால், உங்கள் தாயையோ அல்லது உங்கள் தந்தையையோ குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லலாம். உங்கள் குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து, அவர்களால் இருக்க கூடிய நேரங்களில் மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லலாம்.

நம்பிக்கையான ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்தாலே உங்களின் பாதி பாரம் குறைந்துவிடும். அத்துடன், உங்கள் பெற்றோருக்கும் அவர்களின் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.

2 குழந்தையை யார் தூங்க வைப்பது

பொதுவாக தம்பதிகளுக்குள் வரும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் இரவில் யார் குழந்தையை தூங்க வைப்பது என்பது தான். ஒரு சில நேரங்களில் நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது மிகவும் சோர்வாக உணர்வீர்கள். மேலும், குழந்தையை தாலாட்ட கூட உடம்பில் வலு இருக்காது. அப்போது நாம் அனைவரும், நம் துணை குழந்தையை தூங்க வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

ஆனால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இதற்கான ஒரே தீர்வு ஒரு செவிலித்தாயை நியமிப்பது தான். அப்படி உங்களால் ஒருவரை வேலைக்கு அமர்த்த முடியவில்லை எனில், நீங்கள் பொறுமையாக சூழ்நிலையை கையாள வேண்டும். உங்கள் துணையிடம் உங்கள் நிலையை எடுத்துச்சொல்லுங்கள் அல்லது உங்களின் வேலை மற்றும் வீட்டில் செலவிடும் நேரம் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்புங்கள். நீங்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து குழந்தையை கவனித்தால் அது மிகவும் எளிதாக இருக்கும். உங்களின் வேலை நேரத்தை பொறுத்து வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். வேண்டுமானால் குழந்தைக்கு யார் உணவு ஊட்டுவது என்று அட்டவணை கூட போட்டு கொள்ளலாம். ஒரு குழுவாக இணைந்து, அவ்வப்போது இடைவேளை தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக சிறப்பாக செயல்பட முடியும்.

3 வேலை செய்யும் இடத்தில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் மையம்

இது சற்றே கடினமான மற்றும் அதிக நாட்கள் பிடிக்கும் வேலை என்றாலும், உங்கள் மேலாளர் அல்லது முதலாளியிடம் இதை பற்றி நீங்கள் பரிந்துரைக்கலாம். உங்கள் நிறுவனமே குழந்தையை கவனித்துக்கொள்ளும் ஒரு மையத்தை திறக்கலாம். உங்களை போன்று குழந்தையை கவனித்துக்கொள்ள சிரமப்படும் பலருக்கும் இது உபயோகமாக இருக்கும். இதனால், நீங்கள் வேலையும் செய்யலாம், அதே சமயம் உங்கள் குழந்தையையும் பார்த்துக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றனர். மேலும், ஒரு ஆய்வின் முடிவில், இந்த மாற்றத்தால் பெற்றோர்களால் பணியில் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. எதற்கும் உங்கள் முதலாளியிடம் இது குறித்து பேசிப்பாருங்கள்.

4 உங்களுக்கான நேரம்

உங்களுக்கு என்று நீங்கள் நேரம் ஒதுக்க முடியாமல் போகும் போது அது கண்டிப்பாக உங்களுக்கு எரிச்சலூட்டும். நீங்கள் ஓய்வாக படுத்திருந்த நாட்கள், காபி குடித்துக்கொண்டே புத்தகத்தை படித்த நாட்கள், எந்த கவலையும் இல்லாமல் உங்கள் துணையுடன் படம் பார்த்த நாட்களை எண்ணி ஏக்கம் வரும். அதுவே சில நேரங்களில் கோபமாக மாறும்.

இதற்கான தீர்வு? உங்கள் நண்பர்களுடன் பேசி, உங்கள் குழந்தையை சிறிது நேரம் கவனித்துக்கொள்ள சொல்லலாம். உங்கள் முதலாளியிடம் நீங்கள் சந்திக்கும் மனஅழுத்தம் குறித்து எடுத்துச்சொல்லுங்கள். ஒரு நாள் உங்கள் வேலையில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு, உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். படத்திற்கு, இரவு உணவிற்கு, ஸ்பா என உங்கள் நாளை கழியுங்கள். உங்கள் இரண்டு பேருக்குமே இந்த இடைவேளை அவசியம் தேவை.

5 தூக்கமின்மை மற்றும் பசியின்மை

குழந்தைக்கு உணவு ஊட்டுவது, டயப்பர் மாற்றுவது, குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்வது, வேலைக்கு செல்வது என பல வேலைகள் நீங்கள் செய்ய வேண்டும் என்பதால், உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காது. சில நேரங்களில் நீங்கள் சரியாக கூட சாப்பிடாமல் இருப்பீர்கள்.

எனவே, 5-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் தூங்குங்கள். வேலைப்பழு அதிகமாக இருந்தால், அதை அரை மணி நேரமாக குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடன் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் ஏதாவது பழங்கள் வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி பழச்சாறு அருந்துங்கள். கண்டிப்பாக பல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon