Link copied!
Sign in / Sign up
20
Shares

அம்மாக்களின் பெருமை பேசும் சிறந்த 6 தமிழ் பாடல்கள்!

இந்த உலகில் நம் தேவையை நிறைவேற்றுபவரே கடவுள் என்றால், நமக்கு நம் அன்னையர்கள் தான் அன்றாட வாழ்வில் கடவுள் என்பது மறுக்க முடியாத உண்மை. மகன் போன் செய்ய அப்பா எப்படி வேலை செல்கிறது என கேட்பார். தங்கையோ உடன் பணிபுரியும் பெண்களை வைத்து அவனை கிண்டல் செய்வாள். ஆனால், முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டு வரும் அன்னை அவள் சாப்பிடவில்லை என்பதையும் மறந்து நீ சாப்பிட்டியாடா என்பாள். அதேபோல் போனில் எத்தனை தொடர்புகள் பதிவு செய்யப்பட்டாலும், 'அம்மா' என அவளுடைய நம்பரை பதிவு செய்து அழகு பார்க்கும் பிள்ளைகள் எத்தனையோ பேர். தன் மகன் தவறே செய்தாலும் மற்றவர்களிடன் விட்டுக்கொடுக்காமல் பேசுபவள் அன்னை மட்டுமே. இப்படி அம்மாக்களின் பெருமையை அரை நிமிடத்தில் நம்மால் கூறிவிட முடியாது. இன்று சினிமாவில் கூட அம்மாக்களின் பெருமை பற்றி ஒரு பாடல் வந்தால் அந்த பாடலை பாடுபவர் முதல், எழுதுபவர் வரை அத்துணை பேரும் தன் ஒட்டுமொத்த உழைப்பை தர தவறுவதில்லை. அம்மா என்பவளின் பெருமை பேச நாமாக கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை. அது தானாக சேர்ந்த கூட்டம்... சேரும் கூட்டம்...

அப்பேற்பட்ட அம்மாக்களின் பெருமை பேசிய தலைசிறந்த 6 தமிழ் பாடலை நாம் இப்போது பார்க்கலாமா!

1. ஆசைப்பட்ட எல்லாத்தையும் (வியாபாரி)

இந்த பாடல் அம்மாக்களின் புகழை உச்சியில் நிறுத்தி அழகு பார்த்த ஒரு பாடல் என கூட சொல்லலாம். ஆம், ஆசைப்பட்ட எல்லாவற்றையும் இந்த உலகில் நம்மால் வாங்கிவிட முடியும். ஆனால் அம்மாவின் அன்பை வாங்க முடியுமா எனும் இந்த பாடல் பலரையும் சிந்திக்க வைத்து கண்ணீரையும் சிந்த வைத்தது. தமிழ் பாடல் வரிகள் புகழ் வாலியால் எழுதப்பட்ட இப்பாடல் இன்று வரை பலரது ரிங்க் டோனாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2. அம்மா என்றழைக்காத (மன்னன்)

இந்த பாடல் பிடிக்காது என யாராலும் சொல்ல முடியாது. ரஜினி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகவும் ஹிட்டடித்த அருமையான திரைப்படம் கூட. இந்த திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் அத்தனை பாடலையும் ஓரம் கட்டிவிட்டு ஒய்யாரமாக ராஜ நடை போட்ட ஒரு பாடல் தான் அம்மா என்றழைக்காத உயிரில்லையே எனும் இந்த பாடல். பழம்பெரும் புகழ் நடிகை பண்டரிபாய் ரஜினியின் அம்மாவாக நடித்திருக்க, அவர் கதாப்பாத்திரம் கண்களையும் கலங்க வைத்த ஒன்று. ஆம், வாதம் வந்தது போல் நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்தார் என சொல்லலாம்.  இந்த பாடலையும் மறைந்த அய்யா வாலி அவர்கள் தான் எழுதினார். இளையராஜா இசையமைத்தார்.

3. அம்மா! அம்மா! எந்தன் ஆருயிரே (உழைப்பாளி)

சூப்பர் ஸ்டார் நடித்த உழைப்பாளி திரைப்படத்தின் இந்த பாடல் பலரது காலர் ட்யூனாக ஒலித்த ஒரு பாடலும் கூட... சுஜாதா ரஜினியின் அம்மாவாக உணர்வுகளாலே நம் அனைவரின் இதயத்தை கட்டிப்போட்ட ஒரு பாடல் இது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. இப்பாடலின் வரிகள் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் அம்மாவின் பெருமையை போற்றி பேசிய ஒரு பாடலும் கூட...

4. சின்னத்தாயவள் (தளபதி)

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்மூட்டி நடித்து நட்பின் பெருமைக்கு இலக்கணமாய் விளங்கிய ஒரு திரைப்படம் தான் தளபதி. இன்றுவரை இந்த திரைப்படத்தின் பாடல்களும், வசனங்களும் பெருமையுடன் பேசப்பட்டு வர, இயக்குனர்களின் ஆசான் மணி ரத்னம் இயக்கினார். இந்த திரைப்படத்தின் முதல் காட்சியிலே திரைப்படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட, அதற்கு காரணமாக அமைந்தது நெகிழ வைத்த இந்த சின்ன தாயவள் பாடல் தான். இன்றுவரை இந்த பாடலை கேட்டு ஐந்து நிமிடம் உருகி நிற்கும் பிள்ளைகள் எத்தனையோ பேர். இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைக்க, வாலி அய்யா அவர்கள் பாடல் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. நூறு சாமிகள் இருந்தாலும் (பிச்சைக்காரன்)

திரைப்படம் வருவதற்கு முன்னே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு படம் தான் பிச்சைக்காரன். அம்மாவிற்காக பிச்சை பாத்திரம் ஏந்தும் ஒரு பணக்கார மகனின் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்திருந்தார் இயக்குனர் சசி. இந்த திரைப்படத்தின் நூறு சாமிகள் இருந்தாலும்., அம்மாவை போல் ஆகிடுமா எனும் இந்த பாடல் ஒவ்வொரு பிள்ளையின் இதயக்கதவை தட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்தது. இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பட்டையை கிளப்பி வசூலில் சாதனை படைத்தது.

6. ஆராரிராரோ! (ராம்)

அம்மாவுக்காக எதையும் செய்யும் ஆக்ரோஷமான மகனின் பழி வாங்கும் உணர்வை தத்ரூபமாக படம்பிடித்து கண்களை கொள்ளை கொண்ட ஒரு திரைப்படம் தான் ராம். இந்த திரைப்படத்தின் ஆராரிராரோ பாடல் பிள்ளைகளை மிகவும் நெகிழவைத்த ஒரு பாடல் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். 

இறைவா! கண் முன் தோன்று என்றேன்

நான் ஏன் தோன்ற வேண்டும் என்றார்.

எனக்கு பிரச்சனை அதனால் தான் என்றேன்.

நீ என்ன அவ்வளவு சுயநல வாதியா என்றேன்

அவரோ ஆமாம் என்பது போல் அசரீரி தந்தார்.

கோபம் கொண்டு அம்மாவின் மடியில் தலை சாய்ந்தேன்

என் கவலைகளை கண்களை மூடி பட்டியலிட்டு அழுதேன்.

அப்போது மயிலிறகாய் இருக்கைகள் என் தலையை வருட

மெல்ல கண் திறந்து பார்த்தேன்.

என் அன்னை சிரித்தபடி என்னை பார்த்தாள்.

அவள் பின்னால் ஒளிவட்டம் தெரியவில்லை.

அவள் கைகளில் எந்த ஆயுதமும் காணவில்லை

அவள் நாக்குகள் வெளிப்புறம் வரவில்லை.

அவள் என்னிடம் எந்த தட்சணையும் கேட்கவில்லை.

இருப்பினும் நிறைவேற்றினால் என் கோரிக்கையை

கவலையை மறந்து கடவுளாய் அவளை பார்க்க

அவளோ என்ன சாப்பிடுகிறாய் என்றாள்...

அனைவருக்கும் இனிய அன்னையர் தின (மே - 13) நல்வாழ்த்துக்கள்... 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon