குழந்தைகள் வளர வளர அவர்களை சிறந்த குழந்தையாக வளர்க்க வேண்டும் எனும் எண்ணம் பெற்றோர் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் சில நேரங்களில் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். இது குழந்தைகளிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினால், அவர்களின் வாழ்வே கேள்விக் குறியாகிவிடும். இங்கு பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய குழந்தை வளர்ப்பு தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
1 உங்கள் குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் போதிலிருந்தே, அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிடுங்கள். உங்கள் அன்பை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சியுங்கள்.
2 படிப்பின் முக்கியத்துவத்தை சிறு வயது முதலே குழந்தைகள் உணர்ந்துகொள்ளும்படி விரிவாக எடுத்துக் கூற வேண்டியது உங்கள் கடமை.
3 உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடந்துகொள்ளுங்கள். அவர்களின் சுய மதிப்பு பாதிக்காத வகையில் உங்கள் செயல்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
4 வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் குழந்தைகளைப் பாராட்டுங்கள். வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பாராட்டுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, மனம் திறந்து அவர்களைப் பாராட்டுங்கள். ஏனென்றால், பாராட்டப்படும் குழந்தைகள் மனநிறைவோடும், உற்சாகத்துடனும் வளர்வார்கள்.
5 உங்கள் குழந்தைகளை முடிந்த அளவு நம்புங்கள். நீங்கள் நம்புவதை அவர்கள் புரிந்து கொள்ளும் படியும் நடந்து கொள்ளுங்கள். நல்ல நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு தங்கள் வாழ்வை தொடங்க உதவுகிறது.
6 உங்கள் குழந்தைகளின் திறமைகளை சிறுவயதிலேயே அடையாளம் கண்டு, ஊக்குவியுங்கள். அந்தத் திறமைகளை சிறப்புத் திறமையாக மாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்குங்கள்.
7 வெற்றி, தோல்வி, பாராட்டு கிடைக்கும்போதும், விமர்சனத் தாக்குதல்கள் ஏற்படும் போதும் ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் பண்பை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.
8 சிறுவயதில் தங்களின் சின்னச்சின்ன செயல்களுக்கும் உங்களின் அங்கீகாரத்தை உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எனவே அவ்வப்போது, ‘நீ செய்வது சரிதான்’, ‘இதை இப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்னும் வழிகாட்டுதலுடன் கூடிய அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.
9 உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்வரை பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். எப்போது தவறு நிகழ்கிறதோ, அப்போதே நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டவும் தயங்காதீர்கள்.
10 உங்கள் குழந்தை தவறு செய்யும்போதெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, பின்னர் ஒருநாளில் அத்தனை தவறுகளையும் பட்டியலிட்டு ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டினால் அந்தக் குழந்தைக்கு உங்கள்மேல் வெறுப்பு உண்டாகிவிடும். எனவே, எப்போது தவறான பாதையில் உங்கள் குழந்தை செல்கிறதோ, அப்போதே அதனை சுட்டிக்காட்டவும், திருத்தவும் தயங்காதீர்கள்.
11 உங்கள் குழந்தைகள் உங்கள்மேல் பாசம் வைப்பதைப்போலவே, நீங்கள் அவர்கள்மீது தேவையான அளவு பாசம் வையுங்கள். அளவுக்கு அதிகமான அன்பு சிலநேரங்களில் குழந்தைகளை தவறான வழியில் திசை திருப்பவும் வாய்ப்புள்ளது.
12 குழந்தைகள் கேட்பதையெல்லாம் கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் கேட்கும் பொருள் அவர்களுக்குத் தேவைதானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து வாங்கிக் கொடுப்பது நல்லது.
13 உங்கள் குழந்தை சிறு தவறு செய்துவிட்டால் மிகப்பெரிய தண்டனையை கொடுத்து விடாதீர்கள். அந்தத் தவறை அவர்கள் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
14 இளம்வயதிலேயே உங்கள் பிள்ளைகளுக்கு லஞ்சம் கொடுத்து பழக்காதீர்கள். உதாரணமாக, நீ கடைக்குப்போய் பொருள் வாங்கி வந்தால் உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேன் என தேவையற்ற முறையில் பரிசுகள் வழங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. சின்னச்சின்ன பரிசுகளுக்கு ஆசைப்படும் குழந்தைகளின் மனம், பரிசினைப் பெறுவதற்காகவே சில செயல்களை செய்யும். ஆனால், எப்போதும் பரிசுகளை எதிர்பார்த்து செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டால், அது மோசமான எதிர்விளைவை உருவாக்கிவிடும்.
15 வீணான விவாதங்களை குழந்தைகளிடம் தவிர்த்துவிடுங்கள். அப்படியே விவாதம் ஏற்பட்டால், விவாதத்தின்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி உங்களுக்கு எதிராகவே அந்த வார்த்தையைத் திருப்பி உங்களுக்கு பதிலடி கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
16 உங்கள் குழந்தையின் கல்வியின்மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று திரும்பியதும், பள்ளிப்பாடங்கள் பற்றிய விவரங்களைக் கேளுங்கள். முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்யவும் நேரம் ஒதுக்குங்கள்.
17 உங்கள் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது போலவே, பள்ளியில் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால், மாதம் ஒருமுறை பள்ளிக்கு நேரில் சென்று, ஆசிரியர்களை சந்தித்து உங்கள் பிள்ளையின் குணநலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
18 வீட்டில் தினமும் ஒரு வேளையாவது ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சாப்பிடும்போதே அன்று நடந்த முக்கிய சம்பவங்கள், செய்திகள், அனுபவங்கள், டி.வி. தொடர்கள், இசை நிகழ்வுகள், பள்ளிப் பிரச்சினைகள், பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை அசைபோட்டுக் கொள்வது நல்லது.
19 அடிக்கடி உங்கள் குழந்தைகளிடம் கோபப்படாதீர்கள். உங்கள் கோப உணர்வுகளை தாங்கும் இளைய இதயம் வலி தாங்காமல் துடிக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டால், அவர்களது படிப்பிலும், நடவடிக்கையிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாகிவிடும்.
20. பெரிய தண்டனையை வழங்கி, குழந்தைகளைப் பயப்பட வைத்துவிடாதீர்கள். பயந்துகொண்டே வளரும் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை தங்கள் மனதில் தக்கவைத்து, தடம் மாறவும், தடுமாறவும் வாய்ப்புகள் உள்ளன.
இது போன்ற இன்னும் பல குழந்தை வளர்ப்பு வழிமுறைகளை மனதில் நிறுத்தி பெற்றோர்கள் செயல்பட்டால் நல்ல பண்புள்ள சிறந்த குழந்தைகளை இளம்வயதிலேயே உருவாக்கிவிடலாம்.
