மிளகு காளான் மற்றும் ப்ரோக்கோலி (Pepper Mushroom - Broccoli Fry)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் காளான் என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் அவற்றை நாம் பிரியாணி, குழம்பு மற்றும் வறுவல் எனும் வடிவில் கொடுக்கும் போது, அது அவர்களுக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விதவிதமாக கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு உணவின் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு பிடித்த ஒன்றை வேறுவிதமாக சமைத்து கொடுக்கும் போது விரும்பி உண்பார்கள். மிளகு இயற்கையாகவே மருத்துவ தன்மை கொண்டது. இது குழந்தைகளின் சளியை சரி செய்ய கூடிய சிறந்த மருந்து பொருளாகும். மேலும் ப்ரோக்கோலியில் அதிக அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை வைத்து மிளகு காளான் மற்றும் ப்ரோக்கோலி செய்யும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
நன்கு கழுவி, நறுக்கப்பட்ட காளான்கள் - 12 - 15
நன்கு நறுக்கப்பட்ட ப்ரோக்கோலி - 1
வெட்டப்பட்ட குடமிளகாய் - 2-3
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சமையல் எண்ணை - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சன்னமாக பொடிக்கப்பட்ட மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
உணவை அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி
செய்முறை :
1) ஒரு நான்ஸ்டிக் வாணலியில் 2-3 தேக்கரண்டி எண்ணையை ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
2) பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை கலந்து நன்கு வதக்கவும்.
3) அதன் பச்சை வாடை நீங்கிய பின், காளான், ப்ரோக்கோலி மற்றும் குடமிளகாய் சேர்க்கவும்.
4) இந்த கலவை நன்கு வதங்கிய பின், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும்.
5) பின்பு கை அளவு தண்ணீரை தெளித்து, பாத்திரத்தை மூடிவிட்டு 5 நிமிடங்கள் மெல்லிய தீயில் சமைக்கவும்.
6) இப்போது, மூடியை திறந்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை சமைக்கவும்.
7) இதனுடன், மிளகு தூளை சேர்த்து, சிறிது சிறிதாக மீதமுள்ள எண்ணையை ஊற்றி மெல்லிய தீயில் நன்கு வதக்கவும்.
8) நன்கு வதக்கப்பட்டவுடன் கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான மிளகு காளான் மற்றும் ப்ரோக்கோலி ரெடி.
குடமிளகாய், ப்ரோக்கோலி மற்றும் காளான் கொண்டு செய்யப்படும், இந்த எளிய உணவு வகை ரொட்டி மற்றும் புலவுடன் சேர்ந்தால் நாவூறும் சுவை தரும்.
