Link copied!
Sign in / Sign up
8
Shares

மனைவியே மந்திரி 1: ஆர்த்தியால் அழகாகும் வீடு! -சிவகார்த்திகேயன்

வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு ஆர்த்தி. எத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டாலும் இது மாறாது. 

இணைந்த தருணம்

என் தாய்மாமாவின் மகள்தான் ஆர்த்தி என்றாலும் இருவரும் அவ்வளவாகப் பேசிக்கொண்டதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, “மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்பா” என்று சொன்னார் அம்மா. திருமணமாகும் போது எனக்குப் பெரிய வசதி இல்லை. ஆனால், ஆர்த்தி வசதியான குடும்பத்துப் பெண். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். எனக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுங்க எனக் கேட்டதே கிடையாது. எங்களுக்குத் திருமணமாகும்போது ஆர்த்திக்கு 21 வயது. பொறியியல் படித்திருந்தார். ரொம்ப சீக்கிரமே திருமணம் செய்து கொண்டுவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

நெகிழ்ந்த பொழுது

ஆராதனா பிறந்த நாளை எங்கள் இருவராலும் மறக்க முடியாது. என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என அவர் நினைத்தார். பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி மேடம், குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி. இப்போ நாமதான் போன் செய்து அவர்களுடைய வேலையை கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு என்றால் இடைப்பட்ட நேரத்தில் பேசிக்கொள்வோம். ஆராதனாவிடம் பேச வேண்டுமே, இல்லையென்றால் மேடம் கோபித்துக்கொள்வார்.

ருசிகர வேளை

என் நண்பர்கள் குழுவில் எனக்குத்தான் முதலில் திருமணமானது. திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுப்பார் ஆர்த்தி. மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். சமையலில் புதிதாக ட்ரை பண்ணுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

கற்றுக்கொண்ட பாடம்

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான். வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அன்றைக்கு வந்திருந்த நண்பர்களும் என்னப்பா ஆச்சு என்று பதறிக் கேட்க, அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிவிடுவேன்.

பதறிய காலம்

திரையுலகில் நுழைந்தவுடன் ஆரம்பத்தில் சிறிய வதந்தியில்கூடச் சிக்கவில்லை. ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளேன் என்ற பெரிய வதந்தியில்தான் சிக்கினேன். அப்போது அவர் குழந்தையைச் சுமந்துகொண்டிருந்ததால் ரொம்ப வருந்தினேன்; பயந்தேன். இந்த நேரத்தில் இந்த வதந்திச் செய்தியைப் படித்தால் என்ன நினைப்பார் என்று நினைத்து அதை அவரிடமிருந்து மறைத்தேன். அடுத்த நாள் அவராகவே, “என்னங்க இப்படியொரு செய்தி வந்துருக்கு?” என்று ரொம்ப யதார்த்தமாகக் கேட்டார். அப்போதுதான் எதையுமே நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய பெண் அவர் என்பது புரிந்தது. “சினிமாத் துறையில் இருந்தால் இதெல்லாம் வரும் என்று தெரியும், பார்த்துக்கொள்ளலாம்” என்று எனக்கு ஆறுதல் சொன்னார். அவரது பேச்சுக்குப் பிறகு எனக்குப் பொறுப்பு அதிகமானதுபோல் உணர்ந்தேன். திரைத்துறையில் நுழைந்திருந்த நேரத்தில் இப்படி அவர் சொன்னது ஒரே நேரத்தில் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எது உண்மை, எது பொய் என்று புரிந்துகொள்ளக்கூடிய மனைவி நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்தேன்.

வியத்தகு வேலை

எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்திதான் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால்கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை. இவ்வளவு நேர்த்தியாகச் செய்திருக்கிறாரே என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் எனக்குக் கொடுத்த பரிசாக நினைத்து, அதை வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டியிருக்கிறேன். நாம் வரியைச் சரியாகக் கட்ட வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே அனைத்தையும் சரிபார்த்து, சரியாக வரியைச் செலுத்தி ‘தங்கச் சான்றிதழ்’ பெற்றுக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல.

துணைவியே துணை

வீட்டு விஷயங்களைப் பொறுத்தவரைக்கும் ஆர்த்திதான் எல்லாமே. அவர்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறார். வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம். வீட்டை எப்போதுமே ஜாலியாகவே வைத்திருப்பார். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது என்னிடம் கேட்டுக்கொள்வார்.

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால் ஒரு மாதம் வீட்டுக்கு வர முடியாததுதான் சிரமம். முன்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு ஓடிக்கொண்டிருப்பேன். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு, ஒரு வாரம்கூட வீட்டில் இருந்தது கிடையாது. அப்போதெல்லாம் அதைப் புரிந்து நடந்துகொண்டார். என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. மனைவியையும் மகளையும் பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் நானே அவர்களை வெளியூர்களுக்கு வரவழைத்துவிடுவேன். மற்றபடி நான் வீட்டிலிருந்தால் அவருக்குப் போதும்.

பொதுவாகவே எந்த மாதிரியான கதைகளில் நடித்துவருகிறேன், நடிக்கப்போகிறேன் என்பதை அவருடன் விவாதிப்பேன். படப்பிடிப்புக்கும் அவர் வருவதால் வேலையில் உள்ள ப்ளஸ், மைனஸைத் தெரிந்துவைத்துள்ளார்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon