Link copied!
Sign in / Sign up
2
Shares

மாலை நேரத்து மயக்கத்திலே...

கதிரவன் கண்களை மூடி தூங்க, நிலா மெல்ல வந்து எட்டி பார்க்கிறாள்... அந்தி சாயும் மாலை பொழுதில். மாலை நேரத்து மயக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். கணவன்-மனைவி கட்டிலில் விழும் முன்னே காதலில் விழவும் இந்த மாலை பொழுது தான் முதலில் உதவ முன்வருகிறது. ஒருவன் தன் மனதில் இருக்கும் காதலை காதலியிடம் சொல்லவும் இந்த மாலை நேரம் தான் மதியை மயக்கி மனதை திறக்க உதவுகிறது. 

இந்த நேரத்தில் நாம் மட்டுமா காதல் கொண்டு அழகாகிறோம். இதற்கு பிள்ளையார் சுழி இடுவது இயற்கையல்லவா... 

மரத்தில் பூத்த மலர், சாலை மீது கொண்ட காதலால் கரை ஒதுங்குவதும் இந்த மாலை பொழுதே. கடற்கரையில் எழுந்த அலை, கடைசியாக உங்களை ஒருதடவை வந்து பார்த்து வணக்கம் கூறி, அடுத்த நாளுக்கு தயாராவதும் இந்த மாலை பொழுதுதான். இத்தகைய எழில் மிகு காட்சிகள் கொண்ட மாலை பொழுதை அவ்வளவு சீக்கிரம் நம்மால் விட்டுக்கொடுக்க முடியுமா என்ன?

அதனால் மாலை நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சில செயல்களை நாம் இப்போது பார்க்கலாம்.

நடந்தால் இரண்டடி:

கணவனுடன் கைக்கோர்த்து எங்காவது நடந்து செல்ல ஏற்ற நேரமாக இந்த மாலை பொழுதானது அமைகிறது. இந்த நடை பயிற்சியின் மூலமாக குடும்ப திட்டங்களையும், அதனை செயல்படுத்தும் முறைகளையும் மனம் விட்டு பேச முடிகிறது. மேலும், இந்த நடை பயணம் இனிமையாக முடியும் பட்சத்தில் இரவு பொழுதுக்கும் உகந்த உணர்வை உள்ளத்தில் தேக்கி உடலுறவுக்கும் வலு சேர்க்கிறது.

திரையில் காதல் ஓவியம்:

ஏதாவது காதல் உணர்வுடனான திரைப்படத்திற்கு செல்வதன் மூலம், காட்சிகளை மனதில் சேமித்து இரவு வேளையில் இன்பமாக அதனை பகிர்ந்துக்கொள்ளலாம். திரையரங்கத்தின் மாலை காட்சியை கண்டு வெளிவரும் கணவன்-மனைவி, வித்தியாசமான மன நிலையுடன் இருப்பதை நீங்கள் கவனித்து பார்த்தாலே தெரியும்.

கண்கொள்ளா காட்சி தரும் கண்காட்சி:

பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்ட கண்காட்சிகளுக்கு உங்கள் குழந்தை மற்றும் கணவனுடன் சேர்ந்து செல்வதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியானது உங்கள் மனதிற்கு கிடைத்திட கூடும்.

மணவாளனோடு விளையாட்டு:

கணவன், மனைவி இணைந்து இறகு பந்து போன்ற விளையாட்டுக்களை பேசிக்கொண்டே விளையாடுவதன் மூலம், உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியானது குறைந்திடுகிறது. உங்கள் கணவர் அலுவலகம் செல்பவராக இருந்தால், வார விடுமுறையில் இந்த பழக்கத்தை செயல்படுத்த முயல்வது மிக நல்லது.

கடற்கரையில் ஓர் உலாவல்:

காதலும் கடந்து போகும் உலகில், ஒருவர் மனதில் காதலை விதைக்க உள்ளத்தில் உரமிடுவது கடற்கரை தான். உங்கள் கணவனுடன் கைக்கோர்த்து செல்ல, யார் உங்களை காதலிக்கிறார் என்ற குழப்பம் வரும் அளவிற்கு அமைதியை தருகிறது கடற்கரை பயணம். இருப்பினும், இந்த உணர்வை இறுக்கி பிடித்து வைத்துக்கொள்வதன் மூலம் இரவு தழுவலுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

புதுமை பூக்கும் பூங்கா பயணம்:

பூங்காவில் பூக்கள் பூக்கிறதோ இல்லையோ... புதுமையான எண்ணங்கள் இங்கே வரும் ஒருவருக்கு பிறந்திடக்கூடும். இங்கே நடைப்பாதையில் குழந்தைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால், இனிமையான உணர்வு உங்கள் உள்ளத்தில் பிறப்பதோடு, உங்கள் கணவனை இரவு வேளையில் அன்புடன் இறுக்கி பிடிக்கவும் ஏதுவாக அமைகிறது.

மாடியில் ஓர் மன பரிமாற்றம்:

உங்களால் இவற்றுள் எதுவும் செய்ய முடியாத நிலையில், வீட்டு மாடிக்கு சென்று மனம் விட்டு பேசுவதோடு., மாலை நேரத்து காற்றை பரிமாறிக்கொள்வது மிக நல்லது. நிலவை ரசித்த வண்ணம் கொஞ்ச நேரம் கணவன் மடியில் தலை சாய, இதனால் உங்கள் இரவும் இன்றியமையாத ஒன்றாக அமையும்.

மாலை நேரம் என்பது மாய வித்தைகள் அடங்கிய, மாசற்ற மனதுடன் கொண்டாட வேண்டிய ஒரு நேரமாகும். இந்த நேரப்பொழுதை மனம் கவர்ந்த ஒருவருடன் செலவிடுவதன் மூலம், சிறகு விரித்து பறவைகளோடு பறவையாக நாமும் பறக்கக்கூடும். இந்த மாலை நேரத்தை இனிமையாக தொடங்குவது சிறந்தது. தேவையற்ற, எரிச்சலை தரக்கூடிய விஷயத்தை பேசாமல் இருப்பதனால், இரவு வேளையும் இன்பமயமான உணர்வை உங்களுக்கு அளித்திடும். உங்கள் கணவரின் மன  நிலை பொறுத்து, சொல்ல வந்த விஷயத்தை சொல்வதன் மூலம் அடுத்த நாளும் உங்கள் இருவருக்கும் இனிமையானதாக தொடங்குகிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon