பெங்களூரு:
பெங்களூருவின் ராமநகரா மாவட்டத்தின் ஹோசப்பலையா கிராமத்திலுள்ள இரண்டு மாத பெண் குழந்தை, தொண்டையில் உணவு சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது, அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விவசாயி மஞ்சுநாத் மற்றும் தனலட்சுமி தம்பதியினர், பெங்களூருவின் கரேனஹல்லி பகுதியில் வசித்து வருகின்றனர். மஞ்சுநாத்தின் முதல் குழந்தை, ராகிமால்ட் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதால் புதன்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறப்பின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வந்த குழந்தைக்கு ராகி மால்ட் தரலாம் என அவர்கள் உறவினர் பரிந்துரை செய்ய, அவர்கள் சொல்லுக்கு இணங்க மஞ்சுநாத்தின் மனைவியும் ராகிமால்ட்டை குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். ராகி மால்ட்டை குடித்த குழந்தை ஒவ்வொரு முறையும் வாந்தி எடுக்க, தொண்டையில் சிக்கிய ராகி மால்ட்டை விழுங்க முடியாமல் குழந்தை தவித்திருக்கிறது. உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மகடி அரசு மருத்துவமனைக்கு மஞ்சுநாத்தும், தனலட்சுமியும் தூக்கி சென்று இருக்கின்றனர்.
அரசு மருத்துவமனை டாக்டர் ஞான பிரகாஷ், ஆறு மாதத்திற்குள் உள்ள குழந்தைக்கு செரிமான பிரச்சனை ஏற்பட்டதால் தான் இத்தகைய விளைவு நேர்த்திருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் அவர், "ஆறு மாதத்திற்கு முன்பு குழந்தைக்கு ராகி மால்ட் கொடுப்பது ஆபத்து என்றும்; தாய்ப்பால் தராவிட்டால் பசும்பால் கொடுக்கலாம்..."எனவும் கூறி இருக்கிறார். ஆனாலும், தனலட்சுமியின் குழந்தை தொண்டையில் ராகி மால்ட் சிக்கியதால், சுவாச குழாய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தனலட்சுமியின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, தனலட்சுமிக்கு, ஏற்கனவே இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
இருப்பினும், நகரம் சார்ந்த நனோடலாஜிஸ்ட், டாக்டர் ரஞ்சன் பெஜவார் கூறுகையில், குழந்தை ஆர்வப்பட்டுகூட உணவை விழுங்கி இருக்கலாம் என்றும், உணவு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் சுவாச பகுதி அல்லது நுரையீரலை அடைந்திருக்கலாம் எனவும் கூறுகிறார். மேலும் அவர், "ராகியினால் மட்டும் இவ்வாறு நடைபெறுவதில்லை. தண்ணீர் அல்லது பாலினால் கூட இப்படி நடக்க வாய்ப்பிருப்பதாகவும்..." கூறுகிறார்.
குழந்தைகள் விஷயத்தில் டாக்டரின் பரிந்துரை இன்றி மற்றவர் சொல்லை கேட்பதால் உண்டாகும் இது போன்ற சம்பவங்கள், மனதில் சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது.
