Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியமா?

பெரும்பாலான பெற்றோர் பாலியல் தொடர்பான தகவல்கள் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு முன்பு தெரிந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், குழந்தைகள் சரியான புரிதல் இல்லாமல் அவற்றை தவறான வழிகளில் கற்று கொள்கின்றனர். பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று சொல்லி கொடுப்பார்கள் என பெரும்பாலானோர் நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படி இல்லை என்றால், பிறகு ஏன் பாலியல் கல்வி அவசியம் என கேட்கலாம். பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். இங்கு  பாலியல் கல்வி ஏன் அவசியம் என்பதை பற்றி பார்க்கலாம்.

1 மனித உடலில் ஆணிற்கும், பெண்ணிற்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே ஆண் , பெண் இருபாலருக்கும் சந்தேகம் எழுகிறது. சின்ன சின்ன சந்தேகங்கள் தான் என்றாலும், அது கூட வளரும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். இதை முறையாக சொல்லித்தர வேண்டும். உடல் பற்றிய தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம். “நான் ஏன் இவ்ளோ குண்டா இருக்கேன்?”, “ஒல்லியா இருக்கேன்?”, “கருப்பா இருக்கேன்?” இந்தக் கேள்விகளுக்கு பதில் தந்து அவர்களுக்கு குற்ற உணர்வையும், அழகு பற்றிய புது பார்வையையும் சிறு வயதில் இருந்தே கற்றுத்தர வேண்டும்.

2 பெண்களாக இருந்தால் மார்பகம் பெரிதாகுதல், மாதவிடாய் தோன்றுதல் போன்றவை சிக்கல்களை ஏற்படுத்தும். “அம்மா, இதெல்லாம் பொண்ணுகிட்ட பேசக்கூடாது. அத்தைங்கதான் பேசணும்” என்று நம்முடைய சமூகம் சில முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. அத்தை வந்து இதை சொல்லித் தருவதற்குள் அந்தப் பெண்ணுக்கு சிக்கலாகும். ’வயதுக்கு வருதல்’ என்பது கொண்டாடப்படுவது அல்ல. அதற்கு முன்பே அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது.

3 ஆண்களாக இருந்தால் மீசை முளைத்தல், குரல்வளை உடைந்து வேறு ஒரு குரல் தோன்றுதல் இதெல்லாம். இதைப் பற்றிய தெளிவை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். “அவனுக்கு மட்டும் மீசை முளைச்சிடுச்சி, குரல் மாறுது” என அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை தகுந்த அறிவியலுடன் சொல்லித்தர வேண்டும்.

4 5 அல்லது 6-ஆம் வகுப்புப் படிக்கும் போதே இப்போதெல்லாம் பாலியல் உறவைப் பற்றிய ஆர்வம் தோன்றுகிறது. அவர்களாக ஊடகம், சினிமா, இணையதளத்தில் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கு முன் சரியாக ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் சொல்லிக் கொடுத்து புரிதலை ஏற்படுத்துவது நல்லது.

5 இதே வயதில்தான், அதுநாள் வரை இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தும். “இது காதலா?” எனும் கேள்விக்கு அவர்களே விடையைத் தேட முயற்சிக்கும் போதுதான் உறவுகள் பற்றிய குழப்பமும் பிரச்சனையும் ஏற்படுகிறது.

6 ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட முக்கிய பாதையாக பாலியல் கல்வி இருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் இதுவரை பாலியல் கல்வி எடுக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கேட்பது, “ஏன் அம்மா மட்டும் சமைக்கிறாங்க?”, “அம்மா ஏன் வேலைக்கு போறது இல்ல?” இந்தக் கேள்விகள் குழந்தைகள் கேட்க ஆரம்பித்தாலே சமத்துவம் என்பது சிலரது மனதிலாவது ஏற்படும்.

7 பாலியல் உறவு ஓர் அழகான உறவு. அது நம்மிடமிருந்து மறைத்து வைக்க வேண்டிய விசயமில்லை. “நமக்கான பாலியல் துணை வரும்போது தான் நாம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் துணைக்கு செய்யும் ஒரு மரியாதை. நம் காதலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு.” என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதற்கு பாலியல் கல்வி அவசியமானதாக உணரப்படுகிறது.

8 பத்தாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாலியல் உறவைப் பற்றி முழுதாக சொல்லித் தருவதில்லை. ஆனால், “அது ஒரு நல்ல உறவு. அதனால்தான், நாம் எல்லோரும் இங்கு இருக்கிறோம்” என்று சொன்னாலே போதுமானது. இதை சொல்லாமல் விட்டால் சரியான வழிகாட்டுதல் இன்றி தவறாக அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளும் ஊடகங்களில் காட்டும் பாலியல் உறவில் ஆண்-பெண் சமத்துவம் இருக்காது.

9 இவை எல்லாம் ஏன் வீட்டில் சொல்லித் தர முடியாதா? கண்டிப்பாக, சரியாக அனைத்தையும் சொல்லித்தரும் அளவுக்கு இந்திய பெற்றோர்கள் இல்லை. அவர்கள் பலவற்றை மறைத்து வைக்கத்தான் நினைக்கிறார்கள். வீட்டில், டிவி பார்க்கும்போது ஒரு முத்தக்காட்சி வந்த உடனேயே சேனலை மாத்திடுவாங்க. அப்பதான் அது என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் ஏற்படும்.

10 ஆசிரியர்களும் கூட, இனப்பெருக்க முறை பற்றி பாடம் வந்தால், “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? நீங்களே படிச்சாலே புரியும்.” என்று சொல்லிவிடுவார்கள். தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் கல்வி சாத்தியமே.

எதையும் சரியான வழியில் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியமாகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon