Link copied!
Sign in / Sign up
8
Shares

குழந்தைகளுக்கு குளிர்கால நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவுகள்

குளிர்காலம் துவங்கிய உடனே சளி, இருமல், காய்ச்சல் என குழந்தைகள் அதிக நோய்களால் தாக்கப்படுவார்கள். காரணம், இந்த காலகட்டத்தில் காற்றில் ஈரப்பதம் கலந்திருப்பதால் நுண்கிருமிகள் வீரியமாகச் செயல்படும். இதனாலேயே குழந்தைகள் எளிதில் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அவற்றை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு அதிக ஆற்றலும், நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படும். ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான  ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற செய்யலாம்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வைட்டமின் சி, வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் சத்துகள் அடங்கிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு கொடுக்கும் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து, குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய பழங்கள் மற்றும் பயறு வகைகளைக் கொடுக்கலாம்.

1 பழங்கள்

சிட்ரஸ் நிறைந்த பழங்களை அதிகம் கொடுக்கலாம். சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், ஸ்ட்ராபெரி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன், கொய்யா, மாதுளை போன்ற பழ வகைகளையும் தினமும் கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

2 பயறு

முளைகட்டிய பயறு, பாசிப்பயறு, வேர்க்கடலை, மூக்கடலை போன்றவற்றை வேகவைத்து கொடுக்கலாம். இவற்றிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும் வேர்க்கடலை குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது.

3 காய்கறிகள்

பொதுவாகவே காய்கறிகள் உடலுக்கு தேவையான சத்துக்களை தரக் கூடியவை என்றாலும், நிறமிக்க காய்கறிகளான பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் அதிக அளவில் இருக்கும் பீட்டா கரோட்டீன் சத்து நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது.

4 வைட்டமின் ஈ

நட்ஸ், முட்டை, கோழி, சோயா பீன்ஸ் போன்றவற்றில் வைட்டமின் இ அதிகளவில் உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.

5 தானியங்கள்

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை மாவாக்கி தோசையாகவும், ரொட்டியாகவும் சமைத்து தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

6 சூப்

இது குளிர்காலத்துக்கு ஏற்ற கதகதப்பான உணவு. மாலை வேளையில் குழந்தைகளுக்கு, வெதுவெதுப்பான சூட்டில், சிறிது மிளகுத்தூள் தூவிய காய்கறி சூப் கொடுக்கலாம். இது சளித் தொந்தரவுகள் வராமல் தவிர்க்கும் என்பதோடு குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

7 மீன்

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு. இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் சக்தியை (மெட்டபாலிஸம்) சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் வாரத்துக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம்.

நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மேற்சொன்ன உணவுகளை மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon