Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு என்ன தேவை தெரியுமா?

ஒரு பெண் தன் கற்பக்காலத்திலே குழந்தையை வளர்ப்பதற்கான மன  கோட்டையை கட்ட தொடங்கிவிடுகிறாள். அப்படி இருக்க, குழந்தை பிறந்தவுடன் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்னும் செயல்திறனையும் சேர்த்து செய்ய தொடங்கிவிடுகிறாள். எதை வாங்க வேண்டும்? எது தன் குழந்தைக்கு தேவையானது? சிறந்தது? என தேடி... தேடி... தன் வீட்டில் சேகரிக்க, அதில் குழந்தைகளின் அத்தியாவசிய தேவை மட்டுமே தெரிவதன் மூலம் தாய்மையின் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர முடிகிறது.

குழந்தை என்பது ஒரு குடும்பத்தின் எதிர்க்கால ஒளி விளக்கு. அதன் வெளிச்சம் மற்றவரை அன்புடன் பார்க்க வேண்டுமெனவே தாயானவள் ஆசைப்படுகிறாள். அதனால், தன் குழந்தையின் தேவைகளை சிறந்ததாக தரவேண்டுமெனவும் அவள் ஆசைப்படுவாள். இந்த தாய்மையின் ஆசைக்கு ஏழை, பணக்காரன் எனும் வித்தியாசம் தெரியாது. தான் கசங்கிய ஆடையை உடுத்தினாலும், அவள் குழந்தைக்கு மடிப்பு கலையாத ஆடை உடுத்தி அழகு பார்ப்பவள் தாய்.

இத்தகைய தன்மை கொண்ட தாய்மை எனும் சொல் வேறு எப்படி எல்லாம் தன் குழந்தையை பேணி பாதுகாக்கிறது? மேலும் எப்படி எல்லாம் பாதுகாக்கலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

துணிகள்:

ஆடைகள் பலவிதம், அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது நாம் நன்கறிந்த ஒன்றே. அந்த ஆடைகள் அனைத்தையும் தன் மகன்/மகளுக்கு உடுத்தி ஆசையை நிறைவேற்றி கொள்பவள் தாய் என்பதில் மாற்றுக்கருத்து ஏது? குழந்தை பருவத்தில், அவன் போட்டுருக்கும் பேண்டில் உச்சா போவான் என தெரிந்தும், தாயானவள் மாற்று உடையை அவனுக்காக தயார் செய்து வைத்துக்கொண்டு காத்திருப்பாள்.

குழந்தை துடைப்பான்கள்:

குழந்தையை வெளியில் அழைத்துச்செல்லும் தாய் கையில் எக்ஸ்ட்ரா துணியுடன் வலம் வருவாள். எங்கே? எப்போது? தன் மகன் மலம் கழிப்பான் என அவளுக்கும் தெரியாவிட்டாலும், அதை இரகசியமாக செய்து முடித்து மற்றவர்கள் கண்ணில் மண்ணையும் தூவி தன் குழந்தையை காப்பாற்றுபவள் தாய்.

மாற்று பாய்கள்:

குழந்தை இருக்கும் வீட்டில், படுக்கையறையின் மேலே ஒரு பாயை விரிப்பது மிக நல்லது. அந்த பாயை பிளாஸ்டிக்காக பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனால், உங்கள் படுக்கை அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள பாயுடன் போய் விடுகிறது, உங்கள் சிரமமானது.

பருத்தியினாலான காலுறைகள் மற்றும் தொப்பிகள்:

புதிதாக பிறக்கும் குழந்தையின் உடல் வெப்பம் என்பது சீராக ஒருபோதும் இருப்பதில்லை. அதனால், குழந்தையின் கால்கள் மற்றும் தலையை சுற்றி மறைப்பது நல்லது.

பருத்தியினாலான கை உறைகள்:

புதிதாக பிறக்கும் குழந்தைக்கு நகம் என்பது மிக வேகமாக வளரக்கூடும். ஆகையால், குழந்தைகள் தன்னை தானே கீறிக்கொள்ள வாய்ப்பு அதிகமிருக்கிறது. அதனால், கையுறைகள் போட்டு விடுவது இந்த கீறல் காயத்திலிருந்து குழந்தைகளை காப்பாற்றுகிறது.

சிறு சிறு துணிகள் வைத்துக்கொள்ளுதல்:

உங்கள் குழந்தை பால் பருகும் போது உங்கள் தோளில் ஒரு துணியை போட்டுக்கொள்வது நல்லது. இதனால், குழந்தை தன் வாயை எடுக்கும் போது வழியும் பாலை துணியால் துடைக்க ஏதுவாக அமைகிறது.

குழந்தையின் உச்சந்தலையை பாதுகாத்தல்:

குழந்தையின் உச்சந்தலையின் தோலானது மெல்லிசாக இருக்கும் கவனித்து இருக்கிறீர்களா? இதனை, குழந்தையின் குறிப்பிட்ட வளர்ச்சி வரை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைக்கு விக்கல் எடுத்தால் கூட தலையை தட்டாமல் வேறு சில வழிகளை பின்பற்றுவதற்கு இதுதான் காரணம். கிராமங்களில் விக்கல் எடுக்கும்போது உச்சந்தலையில் இலையை வைப்பார்கள். ஆனால், இது சரியான முறைதானா என்பதை உங்கள் தாத்தா, பாட்டியிடம் ஆலோசித்து செயல்படுவது மிக நல்லது...

குழந்தையை கொசு கடிக்கிறதா?

அப்படி என்றால், தயவுசெய்து வேதி பொருளால் ஆன எந்த வித காயில் அல்லது லிக்விட்டை பயன்படுத்தாதீர். அதற்கு பதிலாக கொசு வலை வாங்கி குழந்தையை சுற்றி பாதுகாப்பது மிக நல்லது. மேலும், ஜன்னலில் வலைகளை அடித்து அதன் மூலமாகவும் கொசுக்கள் வீட்டினுள் நுழைவதை தடுக்கலாம்.

எடுத்துக்கொள்ளும் மருந்துகள்:

குழந்தைகளின் நலனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் யாவும் மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க இருத்தல் வேண்டும். ஓர் சாதாரண காய்ச்சல் என்றால் கூட, உடனே மருத்துவரை ஆலோசித்து அதன் காரணத்தை தெரிந்துக்கொள்வதன் மூலம் எதிர்க்காலத்தில் அதே பிரச்சனை ஏற்படுவதை உங்களால் தவிர்க்க முடிகிறது. டாக்டரிடம் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ப முதலுதவி மருந்துகள் வாங்கி வைத்துக்கொள்வது அர்த்த இராத்திரி பயத்தை தவிர்க்கும்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றால்...குழந்தை என்பது அப்பயிரில் விளையும் முதல் விதை என்பதை மனதில் கொண்டு அக்குழந்தைக்கு நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் தான் கற்றுத்தர முன்வர வேண்டும். இதனால், நாளை பொழுதில் அவன் மகன்/மகளுக்கு அதனை சொல்லி வளர்க்க, தலைமுறையும் தன்னலத்தோடு பொதுநலம் மின்ன தழைத்தோங்குகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon