நீங்கள் காதலிக்கும் போது, காதலர் தினத்தை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பீர்; சிலர் திருமணமான பின் தங்கள் துணையை காதலித்து, காதலர்களாக மாறி காதலர் தினம் கொண்டாடியிருக்கலாம். ஆனால், குழந்தை பிறந்த பின் பெரும்பாலானோர் காதலர் தினம் கொண்டாடுவதை மறந்து விடுகின்றனர்; இது சரியல்ல.
குழந்தை உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை மாற்றியமைப்பதில்லை; நீங்கள் தான் குழந்தையை காரணம் காட்டி, மாற்றிக் கொள்கின்கிறீர். இச்செயல்பாடு சரியானதல்ல. குழந்தையை தினம் நீங்கள் தான் கவனித்துக் கொள்கிறீர்; காதலர் தினம் அன்று ஒரு நாள் மட்டும், குழந்தையை உங்கள் பெற்றோரின் கவனிப்பில் விட்டு விட்டு உங்களுக்காக நேரம் செலவழியுங்கள்.ஆதலால், குழந்தை பிறந்த பின்னும், குழந்தையுடன் காதலர் தினம் கொண்டாடலாம்.
அவ்வாறு கொண்டாடும் வழிகள் பற்றி இப்பதிப்பில் காணலாம்..!
1. இரவு உணவு..
தினம் வீட்டில் சமைத்து, உண்டு வேலைகளை செய்யும், உங்கள் தினசரி வாழ்க்கையை சற்று மாற்றி, காதலர் தினம் மலரும் அன்றைய இரவை, உங்கள் துணையோடு சேர்ந்து, கொண்டாடி மகிழ இரவு உணவிற்கு உணவு விடுதி சென்று, நேரம் செலவிட்டு உண்டு, உணர்வுகளை பரிமாறி கொள்ளலாம். குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையெனில், குழந்தையுடன் சென்று குடும்பசகிதமாக நேரம் செலவிட்டு அன்பை பரிமாறி கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே புதுவித உணவை சமைத்து உண்டு மகிழலாம்.
2. இரவு படம்..
குழந்தை பிறந்த பின் திரை அரங்கிற்கு செல்வது எல்லாம் அரிதான விஷயமாகி இருக்கும். காதலர் தினத்தை முன்னிட்டு, உங்கள் துணையை திரை அரங்கிற்கு அழைத்துச் சென்று, நல்லதொரு படத்தைப் பார்த்து, நேரம் செலவிட்டு உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
3. இரவு அரட்டை..
குழந்தை பிறந்தது முதல் நீங்கள் பேசிக்கொள்வது பெரும்பாலும் வீடு, வேலை, குழந்தை என மாறிப்போயிருக்கும். ஆகையால், காதலர் தினத்தை உங்களை பற்றி பேச மட்டும் செலவிடுங்கள்; நன்றாக மனம் விட்டு பேசி மனதை பரிமாறிக் கொள்ளுங்கள்.
4. உடலுறவு..!
கர்ப்பம், பிரசவம், குழந்தை வளர்ப்பு என உங்கள் துணையோடு தனித்து நேரம் செலவிட, உடலுறவு கொள்ள நேரமில்லாது போயிருக்கும். ஆனால், காதலர் தின இரவினை உங்களதாக்குங்கள்; அன்றைய இரவில் மனம் விட்டு பேசுங்கள்; உங்கள் துணையை மகிழ்ச்சிப் படுத்துமளவு உடலுறவு கொண்டு மகிழுங்கள்.
5. ஊர் சுற்றுதல்…!
குழந்தை பிறந்த பின் தம்பதியாராய் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆகையால், இந்த காதலர் தின நாளினை உங்கள் நாளாக்கிக் கொள்ளுங்கள். குழந்தையை உங்கள் உறவுகளை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நீங்கள் அன்று ஒருநாள் முழுதும் ஊர் சுற்றி மகிழுங்கள்; மனம் விரும்பும் இடத்திற்கு சென்று, அதைக் கண்டு மகிழுங்கள்.
