ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்றால் அவளிடம் கேட்கப்படும் கேள்விகள் இரண்டே இரண்டு தான். ஒன்று குழந்தையின் பாலினம் குறித்த கேள்வி. இன்னொன்று நடக்க போவது சுகப்பிரசவமா? அல்லது சிசேரியனா? என்பது தான். வெளிநாடுகளில் ஒரு பெண் பிரசவம் என்றதும் அவளுக்கு தேவையான எல்லா பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறதாம். காரணம், சிசேரியனை தவிர்த்து அப்பெண்ணுக்கு சுகப்பிரசவமே சிறந்தது என அவர்கள் நினைத்த காரணத்தினாலே. இன்று ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவம் என சொன்னால் அதிர்ச்சி அடையக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியனுக்கு முன்கூட்டியே உடலளவில் தயாராக வேண்டியதோடு, மனதளவிலும் ஒரு பெண் தயாராக., அதற்கு ஏற்ப அவளை சுற்றி இருப்பவர்களும் எல்லா வித வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகிறது. அவற்றுள் முதன்மையானது பண வசதி என்பதை யாரால் தான் மறுக்க முடியும். இன்று சிசேரியன் ஆதிக்கத்தால் சுகப்பிரசவம் கொண்டு பெருமை கொள்ளும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் எத்தனையோ பேர். நீங்களும் சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இதை எல்லாம் செய்யுங்களேன்.
1. மருத்துவ தேர்வு:
உங்களுடைய கர்ப்ப காலத்தை உங்களைவிட நன்றாக தெரிந்து கொள்பவர் நீங்கள் செல்லக்கூடிய மருத்துவரே. அப்படி இருக்க, அவரை அரை மனதுடன் முடிவு செய்தால் எப்படி! நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவர் மனதளவில் நேர்மையாக இருத்தல் வேண்டும். அத்துடன் அவருக்கு எல்லா வித அறிவாற்றலும் இருந்திட வேண்டும். அப்போது தான் உங்கள் கேள்விக்கான பதிலை அவரால் தர இயலும். இது மிகவும் முக்கியமான ஒன்று. யாரோ சொன்னார் என்பதற்காக ஒரு மருத்துவரை தேர்வு செய்வதைவிட நன்கு ஆராய்ந்து தீர்க்கமான முடிவு எடுத்தல் நலம்.

2. பேசும் விதம்:
நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவர் சரியாக இருப்பது போல், உங்கள் பேச்சிலும் அவரிடம் பேசும்போது தெளிவான பார்வை தெரியவேண்டும். இன்று சுகப்பிரசவம் என்பது அழிந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். நாம் பேசும் விதத்திலேயே உங்களுக்கு சுகப்பிரசவமா? சிசேரியனா? என்பது முடிவு செய்துவிடப்படுகிறது. இதன் விளைவு தான், "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..." என உணர்ச்சிவசப்பட்டு நாம் விடும் வார்த்தை. எனவே டாக்டரிடம் பேசும்போது மிகவும் தெளிவாக பேசிட வேண்டும். உங்கள் மனதில் எழும் கேள்விகளை ஒளிவு மறைவின்றி பயமற்று அவரிடம் கேட்க துணிய வேண்டும்.

3. விழிப்புணர்வு அவசியம்:
உங்களுக்கு சுகப்பிரசவமா? அல்லது சிசேரியனா? என்பதை முடிவுசெய்வது பிரசவத்தின் போதே. அதுவரை கவலையற்று உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துள்ள உணவுகளை உண்டு, திடமான மனதுடன் நீங்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும் என 100 சதவிகித தெளிவான பார்வை உங்கள் நடையில் இருந்தால் மட்டுமே சிசேரியனை தவிர்க்க வாய்ப்பு என்பது காணப்படும்.

4. மூட நம்பிக்கை கூடாது:
கர்ப்பம் என்பது பெண் வாழ்வில் ஏற்படும் முக்கியமான நிகழ்வாகும். இந்த நிகழ்வில் மூட நம்பிக்கையை திணிக்காதீர்கள். ஏனெனில், இது அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்க துடிக்கும் உலகமிது. எனவே, ஒருவர் கூறும் எதிர்மறை கருத்துக்கள் கருவில் வளரும் உங்கள் குழந்தையை பாதிக்க வாய்ப்பிருப்பதை புரிந்து இவற்றை விட்டு விலகுவது மிக நல்லது.

5. உணவுமுறை:
நீங்கள் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருத்தல் வேண்டும். கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் என சில காணப்படுகிறது. அதை நீங்கள் தவிர்த்து முடிந்தளவுக்கு மிகவும் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும்.

6. உடற்பயிற்சி:
வெளிநாடுகளில் வினோத உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். நீங்கள் அதுபோல் செய்ய வேண்டுமென கிடையாது. காரணம், அது முறையான பயிற்சிகளுடன் செய்யப்படுவது. தவறாக பயிற்சி செய்தால் அதுவே கருவில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திடும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று முறையான எளிய உடற்பயிற்சியை செய்து சிசேரியனை தவிர்க்கலாம். இவ்வளவு ஏன்! காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி செல்வதுக்கூட சரியான கர்ப்ப பயிற்சியாக உங்களுக்கு அமைகிறது.
