Link copied!
Sign in / Sign up
5
Shares

சிசேரியன் அறுவை சிகிச்சை பற்றிய 7 மூடநம்பிக்கை

நவீன மயமாக இந்த உலகம் மாறி இருந்தாலும், பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் இன்றளவும் நிலை கொண்டிருக்கின்றன. நம்பிக்கைகள் என்பதை தாண்டி சில மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கும். இந்த மூட நம்பிக்கைகள் இதில் மட்டும் தான் இருக்கிறது என்றில்லாமல், குழந்தை பிறப்பு முதல் மனிதனின் இறப்பு வரை அனைத்திலும் அடங்கி இருக்கின்றன. அதே போல் சிசேரியன் அறுவை சிகிச்சை பற்றிய மூட நம்பிக்கைகளும் இருந்து கொண்டிருக்கின்றன. சிலர் இந்த மூடநம்பிக்கைகள் குறித்து கவலை கொள்வதும் உண்டு. இங்கு சிசேரியன் பற்றிய நம்ப கூடாத மூடநம்பிக்கைகளை பார்க்கலாம்.

1 புண் சீழ் பிடிக்கும்

தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதே போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம். தாய் தண்ணீர் குடிக்காமல் இருந்து வந்தால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதில் முக்கியப் பிரச்சினை தாய்ப்பாலின் அளவு குறைவது. தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக குடிக்க பிடிக்கவில்லை என்றால் ஜூஸ், இளநீர், மோர் மற்றும் நீராகாரம் போன்றவற்றை குடிக்கலாம். இது குழந்தைக்குப் தேவையான பாலை உற்பத்தி செய்ய உதவுகிறது.

2 குளுக்கோஸ் மற்றும் தண்ணீர்

குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது. அந்தக் காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழித் திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் அதிகம் நடைபெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல்புண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே. எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. நரம்பின் வழியாக திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். எனவே, வழித் திரவம் ஏற்றினால் வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூடநம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது, பல மருந்துப் பொருட்கள் நரம்பு வழியாக உட்செலுத்தபடுகின்றன. சிரைவழித் திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும்கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம்.

3 நீண்ட நேர மயக்கம்

சிசேரியன் செய்தால் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருக்க வேண்டும். அதெல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பிவிடும். அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை.

4 தண்டுவட ஊசி

எல்லோருக்கும் இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை என்பதும் மூடநம்பிக்கை. அப்படியெல்லாம் இல்லை. இப்பொழுதும் சிலருக்குப் பொது மயக்கம் அளிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றைப் பொருத்து அமைகிறது.

5 தாய்ப்பால் அளவு குறையும்

சிசேரியன் செய்தால் தாய்ப்பாலின் அளவு குறைவாக இருக்கும் என்பது அடுத்தது. தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். இது தாயின் உணவை பொறுத்தே அமைகிறது.

6 தாய்ப்பால்

தாய்ப்பால் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பால் சுரப்பது என்பது ஒன்றுதான். பால் சுரக்கும் அளவில் எந்த வேறுபாடும் இல்லை. தாய்ப்பால் அளிக்கப்படும் நாட்களில் வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் தொடர்பே கிடையாது என்றால்? இல்லை ஒரு தொடர்பு உள்ளது என்பதே அதன் பதிலாகிறது.

சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்கத் தேவையான ஆக்ஸிடோசின் இரத்தத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்துவிடும். அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்புக் காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த வித்தியாசம் ஆரம்பத்தில் மட்டும் தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது. குழந்தை பிறந்த உடன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

7 இரண்டாவது சிசேரியன்

பலவகைக் காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எனவே, அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதில் பொது விதி கிடையாது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon