Link copied!
Sign in / Sign up
0
Shares

அட்லி படத்துக்கு பேமஸ், இட்லி இடத்துக்கு பேமஸ்...

இட்லி தயாரிப்பதில் என்ன ஸ்பெஷல் என்னும் வியப்பு உங்கள் மனதில் ஏற்படலாம். இட்லி என்பது ஒரு வகை இல்லைங்க. இட்லிக்கு பல பரிணாமம் உண்டு என்றாலும், மாவு இட்லியே விதவிதமாக செய்து சாப்பிடும் இடங்கள் பல. மாவை இட்லி குண்டானில் வைத்தால் இட்லி ரெடி என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த இட்லியையே பிஸினஸாக செய்யும் ஊர்கள் பல. இவ்வளவு ஏங்க... உங்கள் கையில் இருக்கும் குறைந்த முதலீட்டால் அதிக வருமானம் தர நீங்க ஒன்னும் ஐடி கம்பெனி ஓபன் பண்ண வேண்டியதில்லைங்க. ஒரு இட்லிக்கடை போட்டாலே போதும்...

இந்தியாவில் இட்லிக்கு புகழ்பெற்ற இடத்தை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். ரெடியா...!

மதுரை இட்லி:

மதுரையை பற்றி சொல்ல தொடங்கினால் சொல்லிக்கொண்டே போகலாம். "எனக்கு இன்னொரு பேரு இருக்கு..."ன்னு பாட்சா பாணியில் டயலாக் பேசுவது மதுரைக்கே பொருந்தும். அட ஆமாங்க, மதுரைய தூங்கா நகரம்னும் கூப்பிடுவாங்க. இதுக்கு என்ன தெரியுமா காரணம்? தவிச்ச வாய்க்கு தண்ணி தராத உலகத்துல தரமான இட்லிய 24 மணி நேரமும் தர்ற ஒரு ஊரு தாங்க இந்த மதுரை. பீட்சா கிடைக்குமா? பர்கர் கிடைக்குமா? ஏங்குறவங்கள கூட, மதுரை இட்லி கிடைக்குமான்னு கேட்க வைக்குற ஒரு ஊருங்க.

அப்படி என்ன தான் இந்த இட்லியில இருக்குன்னு கேட்குறீங்களா. ஒரு சராசரி மனுஷனோட பசியை போக்குறது இந்த உலகத்துல என்ன தெரியுமாங்க. போதும்னு அவங்க வயிறு சொல்ற அளவுக்கு, அவங்களுக்கு சாப்பாடு கிடைக்கிறது தான். அந்த புண்ணியத்த மதுரை செய்யுதுன்னு சொல்றதுல்ல தயக்கமே வேண்டாம்ங்க. 

பதினைஞ்சு ரூபாய்க்கு சாப்பிட்டாலும்... அந்த மல்லிகை போன்ற இட்லிக்கு மணக்க...மணக்க...வகை வகையா சட்னி வச்சு அழகு பார்க்கும் அப்பத்தா எத்தனையோ பேருங்க. காலம் காலமா, பாட்டன், முப்பாட்டன்னு பாரம்பரியத்த காப்பாத்துற ஒரு ஊருல மதுரையும் ஒன்னுன்னு மார் தட்டி சொல்லலாம்.

கேரளத்து இட்லி:

கேரளாவின் ராமசேரி இட்லி அப்பகுதியில் பட்டையை கிளப்பும் ஒரு உணவும் கூட... இது தோசையை போல் சிறியதாக இருக்கும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால், ஒரு வாரம் வைத்திருந்தாலும்... இதன் டேஸ்ட் என்பது குறையாதாம். 200 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து வந்த முதலியார் ஒருவரால் ராமசேரியில் இந்த இட்லி வியாபாரம் ஆரம்பிக்கப்பட, இன்று நான்கு குடும்பங்கள் இணைந்து இந்த வியாபாரத்தை செய்து வருகிறது. 

இந்த இட்லியை செய்வதற்கு மண் பானை பயன்படுத்தப்படுகிறது. இந்த பானையின் மூலமாக ஒரே நேரத்தில் மூன்று இட்லிகள் செய்ய முடியும். ஆவிப்பறக்க செய்யப்படும் இந்த இட்லி, மென்மையாக இருக்க... சத்தானதாகவும் அமைகிறது. இட்லி சரியான சூட்டில் கடைசிவரை இருந்தால் மட்டுமே., அதன் மென்மை மாறாமல் இருக்கும். அதனால், புளியமர கட்டைகளை அடுப்பு எரிக்க பயன்படுத்துகிறார்களாம்.

இந்த இட்லி செய்ய முக்கியமாக தேவைப்படுவது அரிசியும், கருப்பு கடலையும் தான். ஒவ்வொரு 1 கிலோ அரிசிக்கும் 150 கிராம் கருப்பு கடலை தேவைப்படுகிறது. 

கோவாவின் சன்னா இட்லி:

இந்த இட்லி ஆவி பறக்க பஞ்சு போன்ற அரிசி கேக் போல் இருக்கும். இந்த இட்லி இடிக்கப்பட்ட கோவா சிவப்பு அரிசி மற்றும் தேங்காய் துருவலால் தயாரிக்கப்படுகிறது. இந்த இடித்த மாவை புளிக்கும் வரை வைத்திருந்து, பின்னர் வேகவைக்க வேண்டும். சன்னா இட்லிக்கு தரப்படும் கிரேவிகள் யாவும் நம் நாக்கில் எச்சை ஊறவைக்கக்கூடியது. இந்த இட்லி இனிப்பாகவும் லேசாக இருக்கும். எனவே, கோவா வரும்போது... இந்த சன்னா இட்லியை மறக்காமல் டேஸ்ட் பார்த்து செல்லுங்களேன். 

பெங்களூருவின் ரவா இட்லி:

கர்நாடகாவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று இந்த ரவா இட்லி. இந்த இட்லியானது ரவை, தயிர், கடுகு, கொத்துமல்லி இலை, சீரக விதை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறி இலைகள் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

இந்த சுவைமிக்க ரவா இட்லிக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது, உங்கள் நாக்கை சப்பு கொட்ட வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தட்டை இட்லி:

பெங்களூருவில் இந்த இட்லியை பெரும்பாலான இடத்தில் நீங்கள் பார்த்திடலாம். இந்த தட்டை இட்லியை ஒன்று சாப்பிட்டாலே போதுமெனும் அளவுக்கு பெரிதாய் இருக்க, வேண்டுமென்னும் அளவிற்கு இதன் சுவையும் இருக்கும் என்பதில் ஆச்சரியம் வேண்டாம். இந்த இட்லி தான் ஆபிஸ் மற்றும் ஸ்கூல் செல்பவர்களுக்கு திருப்தியான உணவாக தும்கூரில் அமைகிறது. இந்த இட்லியுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிட்டால், அந்த டேஸ்ட்டை நம்மால் வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

காஞ்சிபுரத்து இட்லி:

காஞ்சிபுரம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பட்டு தான். காஞ்சி பட்டுடுத்தி கைகளில் வளையல் அணிந்து நடந்தால்... காணாத தேவதையை கண்டது போல் உங்கள் கணவருக்கு கூட தோன்றலாம். ஆனால், இப்போது நாம் பட்டை பற்றி பேச போவதில்லை. இட்லியை எப்படி புட்டு சாப்பிட போகிறோம் என்பதை தான் பார்க்க போகிறோம்.

இந்த இட்லியானது மிளகு, சீரகம் என பல பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தினமும் ஓரே மாதிரி இட்லி சாப்பிட்டு போர் அடித்து போனால், இந்த காஞ்சிபுரத்து இட்லியை நீங்கள் சாப்பிடலாமே. இதில் சேர்க்கப்படும் மிளகு, ஜீரா, இஞ்சி போன்றவை இன்னும் சாப்பிட தூண்டும் சுவையை சேர்த்து தருகிறது. இந்த எளிதில் செய்யக்கூடிய இட்லியை காலை அல்லது இரவு உணவுக்கு நீங்கள் செய்து சாப்பிடலாம். 

என்ன நண்பர்களே! இட்லியில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதில் ஒருசிலவற்றை நாம் பார்த்து விட்டோம். விரைவில், இட்லி செய்யும் முறையையும் பார்க்கலாம். தினமும் இட்லியா என நாம் சலித்து போகலாம். ஆனால், ஒரு சிலருக்கு அந்த இட்லியே சாப்பாடாக கூட கிடைப்பதில்லை. ஒரு சராசரி மனிதனின் மாத வருமானத்திற்கு ஏற்று சாப்பிட முன்வரும் உணவுகளில், மெனுகார்டில் இருக்கும் பலவற்றை கடந்து நம் கண்கள் எப்போதும் செல்வது என்னமோ இட்லி மேல் தான் என்பது மறுக்க முடியாத மாத கடைசி உண்மையும் கூட...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon