Link copied!
Sign in / Sign up
9
Shares

பெற்றோர்களே! Youtubeஐ அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்படி என்றால் இதை மறக்காமல் பாருங்கள்!

இருபதாம் நூற்றாண்டில் வாழும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. உலகின் எந்த ஒரு மூலையில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் சமூக வலைத்தளங்களின் உதவியோடு அதை உடனுக்குடன் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கு பலரின் நண்பர்களே வாட்ஸப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தான். பலபேரின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து., சமூக வலைத்தளத்தில் தான் முடிகிறது. அப்படிப்பட்ட சமூக வலைத்தளங்களில் ஒன்றுதான் Youtube. 

Youtube, காணொளிகளை பார்ப்பதற்கும் , பகிர்ந்து கொள்வதற்கும் பதிவேற்றம் செய்வதற்குமான பிரத்தியேகமான வலைத்தளம் ஆகும். எல்லா விதமான காணொளிகளையும் Youtube மூலம் நாம் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பலவித காணொளிகளை Youtubeஇல் நம்மால் காண முடியும். விளையாட்டு, அரசியல், சினிமா, அறிவியல் போன்ற அனைத்து துறை சம்பந்தமான காணொளிகளையும் நம்மால் Youtubeஇல் பார்த்து பயன்பட முடிகிறது.

மனிதர்களின் குணாதிசயங்கள் பலவிதம். எந்த ஒரு மனிதனையும் 100 சதவீதம் நல்லவன் என்றோ 100 சதவீதம் கெட்டவன் என்றோ சொல்லிவிட முடியாது. நல்ல குணங்கள் கெட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவன் தான் மனிதன். ஒருசிலரிடத்தில் நல்ல குணங்கள் அதிகமாகவும், கெட்ட குணங்கள் குறைவாகவும் காணப்படுகிறது. இன்னும் ஒரு சிலரிடம் கெட்ட குணங்கள் அதிகமாகவும், நல்ல குணங்கள் குறைவாகவும் காணப்படுகிறது. மனிதனின் குணங்களிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் போது மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. மனிதன் கண்டுபிடித்த அனைத்து கண்டுபிடிப்புகளும் நமக்கு நன்மையை மட்டும் தரவில்லை ஒரு சில தீமைகளையும் சேர்த்தே தான் நமக்கு தருகின்றன. Youtube போன்ற சமூக வலைத்தளங்களாலும் தீமைகளும் நன்மைகளும் சேர்ந்தே நமக்கு கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா!!

Youtubeஇன் நன்மைகள்

Youtube சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவிதங்களில் உதவுகிறது.

கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள Youtubeஇன் உதவியோடு பலவித தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய தலைமுறையில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு பல விதமான செயல்திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. இன்டர்நெட்டின் உதவியோடு Youtubeஐ பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் சேகரிக்க வேண்டிய தகவல்களை குழந்தைகள் எளிதாக பெற்றுக் கொள்ள முடிகிறது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான எல்லா விதமான காணொளிகளும் Youtubeஇல் இருக்கிறது. என்னென்ன பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த தலைப்புகளைத் தேடி காணொளிகளை பார்ப்பதன் மூலம் அவற்றை கற்றுக் கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இயந்திரவியல் படிக்கும் ஒரு மாணவன் ஒரு வண்டியின் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது என்று Youtubeஇல் காணொளிகளை பார்ப்பதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான காணொளிகளும் Youtubeஇல் இருக்கின்றது. அதனைப் பார்ப்பதன் மூலம் வீட்டிலிருந்தபடியே போட்டித் தேர்வுகளுக்கு எளிதாக தங்களை தயார்படுத்திக் கொள்ள முடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக சம உரிமை பெற்று விட்டனர் என்றே சொல்லலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லாவிதமான துறைகளிலும் சாதிக்கின்றனர். படிப்பதற்காக கல்லூரிக்கு செல்வது, அதன் பின்பு வேலை என்று இருக்கும் இன்றைய பெண்கள் சமையலைக் கற்றுக் கொள்வதில்லை. இதனால் திருமணத்திற்கு பின் பலருக்கு சமைக்க தெரிவதில்லை. ஆனால் Youtubeஇல் உள்ள பல்வேறுவிதமான சமையல் காணொளிகளைப் பார்ப்பதன் மூலம் பெண்களால் தங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து கொடுக்க முடிகிறது. சாதாரண ரசம் வைப்பது முதல் மீன் பிரியாணி தயாரிப்பது வரை பல ஆயிரக்கணக்கான உணவு வகைகளை தயார் செய்வது எப்படி என்ற முறைகளைக் காட்டும் காணொளிகள் Youtubeஇல் உள்ளன. இதனால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் தங்களால் முடிந்ததை சமைத்து தங்கள் மனைவியை ஆச்சரியப்பட வைக்க முடிகிறது.

ஒரு காலத்தில் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டால் தாங்கள் தினமும் பார்த்து வந்த நெடுந்தொடரை பார்க்க முடியவில்லையே , அத்தொடரின் நாயகிக்கு என்ன நடந்து இருக்குமோ என்று கவலைப்பட்ட பெண்கள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அத்தனை தொடர்களையும் Youtube மூலம் கண்டு மகிழ முடிகிறது.

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தோனி ஆறு ஓட்டங்களை அடித்து வெற்றி பெறச் செய்த காட்சியை உடனே பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கூட Youtube மூலம் அதனை உடனே காண முடிகிறது. யுவராஜ் அடித்த ஆறு சிக்சர்கள், விராட் கோலியின் கவர் டிரைவ், சாய்னாவின் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வாங்கும் நிகழ்வு என அவரவருக்கு பிடித்த விளையாட்டு வீரரின் சிறந்த ஆட்டங்களை கண்டு கழிக்க முடிகிறது.

இத்தனை நன்மைகள் செய்யும் Youtube மூலம் தீமைகள் வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி தற்போது நம் மனதில் எழலாம். ஆனால் அதற்கு பதில் "ஆம்" என்பதுதான்.

Youtube தீமைகள்

ஒரு காலத்தில் நிலா நிலா ஓடி வா என்று வானத்தில் உள்ள நிலாவைக் காட்டியும் நட்சத்திரங்களைக் காட்டியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய தாய்மார்கள் இன்றைக்கு கைப்பேசியில் உள்ள Youtube காணொளிகளை காண்பித்து சாப்பாடு ஊட்டுகின்றனர். இது குழந்தையின் பார்வையை பாதிப்படைய செய்வதோடு மட்டுமல்லாமல் குழந்தையை சிறுவயது முதலே கைப்பேசிக்கு அடிமையாக மாற்றி விடுகிறது. அந்தக் குழந்தை வளர வளர கைபேசியை விடுவதே இல்லை. ஒரு காலத்தில் விடுமுறை நாட்களில் தெருக்களில் வந்த விளையாடிய குழந்தைகளை இன்றைக்கு காணமுடிவதில்லை. பாரதியார் தன்னுடைய கவிதையில் ஓடி விளையாடு பாப்பா என்று சொல்லியிருப்பார். ஆனால் இன்றைக்கு குழந்தைகள் கார்ட்டூன் போன்ற காணொளிகளை பார்த்து கொண்டு ஓடி ஆடி விளையாடாமல் உடம்புக்கு வேலை கொடுப்பதே இல்லை. இதனால் பிற்காலத்தில் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இது மட்டுமல்லாமல் ஒரு குழந்தை Youtubeஇல் கார்ட்டூன் போன்ற காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது தெரியாமல் வேறு ஏதாவது காணொளியை அழுத்துவதன் மூலம் ஒரு சில நேரங்களில் ஆபாச வீடியோக்களை காண நேரிடுகிறது. இது அந்தக் குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிவதோடு அக்குழந்தையின் குணநலனை மாற்றிவிடுகிறது.

பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொட்ட இக்காலத்தில இன்டர்நெட் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தும் இளைஞர்கள் அதனை சரியான விதத்தில் பயன்படுத்தாமல் Youtubeஇல் தேவையில்லாத ஆபாச வீடியோக்களை பார்க்கின்றார்கள். அதை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதேபோல தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால்தான் இன்றைக்கு சமூகத்தில் கற்பழிப்பு, பாலியல் கொடுமை போன்ற செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

Youtube மூலம் நடைபெறும் இன்னொரு முக்கியமான தவறு, தாங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகளை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக அதற்கு சம்பந்தமே இல்லாத தலைப்புகளை அந்த காணொளிகளுக்குக் கொடுத்து, அந்த காணொளிக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் புகைப்படத்தை போட்டு பதிவேற்றம் செய்வது. நம்மில் பலர் ஒரு சில காணொளிகளை உள்ளே சென்று பார்ப்பதில்லை. தலைப்பை பார்த்தவுடனேயே அந்த பிரபலம் தவறு செய்துவிட்டார் என்று நம் மனதில் எண்ணிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நமக்குத் தெரிந்தவர்களிடமும் அதைக் கூறுகிறோம். இதன் மூலம் உண்மையான தகவல்கள் மக்களை சென்றடையாமல் பொய்யான தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன. எடுத்துக்காட்டாக ஏதாவது செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு தாங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளியை அதிகம்பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக, விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் என்று முதல் பக்கத்தில் போட்டுவிட்டு உள்ளே வேறு செய்தியை கூறுகின்றனர். இதனால் நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது சாதாரண மக்களின் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் படங்களை விமர்சனம் செய்வோர் படம் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே படத்தைப்பற்றி தவறான விமர்சனங்களை கொடுப்பதால் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில் பணிபுரிந்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

எந்த ஒரு பொருளையும் சரியாக பயன்படுத்துவதன் மூலம் அதனால் வரும் தீமைகளை நாம் சரிசெய்ய முடியும்.

குழந்தைகளின் கையில் Youtube காணொளியை திறந்து அப்படியே கொடுத்துவிடாமல் தேவைப்படும் நேரங்களில் தேவையான நல்ல கருத்துக்கள் அடங்கிய காணொளிகளை பார்க்கச் செய்வதன் மூலம் சிறுவயது முதலே குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க முடியும்.

ஒரு படத்தை விமர்சிப்பது தவறு அல்ல. ஆனால் அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். படம் வெளிவந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின் அதை விமர்சித்து காணொளிகளை வெளியிடுவது நல்லது.

இளைஞர்களும் தேவையில்லாத காணொளிகளை பார்க்காமல் தேவைக்கு மட்டும் Youtubeஐ பயன்படுத்துவது சிறந்தது.

இவ்வாறு எல்லாவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்வோம். நம் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் நடத்துவோம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon