Link copied!
Sign in / Sign up
2
Shares

சிசேரியனுக்கு பிறகு உண்ண வேண்டியதும், உண்ணக்கூடாததும்

தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாகும். தாய்மையில் தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். குழந்தை கருவில் உருவான நாள் முதல் அதை பெற்றெடுப்பது வரை ஒரு தாய் உடல் மற்றும் மன அளவில் படும் வேதனைகள் எண்ணிலடங்காதவை. ஒரு காலத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் சுகப்பிரசவத்தில் பெற்ற நம் தாய்மார்கள் வாழ்ந்த இந்த பூமியில் இன்றைக்கு ஒரு குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுப்பதே ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

சுமார் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்னால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது என்று சொன்னால் ஆச்சரியமும் கலக்கமும் அடைந்த மக்கள் இன்றைக்கு சுகப்பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என்று சொன்னால் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு நவீன வாழ்க்கை முறைகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் நம் உடல்நலக் கூறுகளை அடியோடு மாற்றிப் போட்டு விட்டன.

ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கால கட்டம் மனதளவிலும், உடலளவிலும் கடினமானதாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அப்பெண்ணின் உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கும் மிகவும் முக்கியமானதாகும்.

சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றவர்களை விட அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றவர்கள் தாங்கள் இழந்த பலத்தை மீட்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு சில வாரங்களில் இழந்த பலத்தை மீட்க முடியும்.

ஆரோக்கியமான உணவு என்றால் எந்த உணவை தேர்ந்தெடுத்து உண்பது என்னும் கேள்விக்கு கிடைக்கும் விடைகள் குழப்பமானதாகவே இருக்கிறது. ஒரு சிலர் திட உணவை உண்ணலாம் என்றும் ஒரு சிலர் திட உணவை உண்ணக் கூடாது என்றும் சொல்வதால் எந்த உணவை தேர்ந்தெடுத்து உண்பது என்ற குழப்பம் எல்லா பெண்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.

அறுவை சிகிச்சைக்குப் பின் உண்பதற்கு ஏற்ற உணவு வகைகள் என்னென்ன, எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதது,எந்தெந்த உணவுப் பொருட்களை உண்ணக் கூடாது, நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி கீழே காணலாம்

அறுவை சிகிச்சைக்கு பின் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு வகைகள்

ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை உண்பது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட காயத்தை விரைவில் குணப்படுத்துவதற்கும் உதவி புரியும். கர்ப்ப காலத்தில் இருந்ததுபோலவே புரோட்டீன்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பது நல்லது. தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மற்றவர்களை விட 500 கலோரிகள் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் சேர்த்துக் கொள்ளும் கலோரியின் அளவு 1800 கலோரியை தாண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தைக்கு மேல் பால் ஊட்ட வேண்டியது இருந்தால் 1800 கலோரிகளுக்கு மேல் சேர்த்துக்கொள்ளலாம்.

ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை உண்பது மட்டுமல்லாது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது அறிவுறுத்தப்படுகிறது. வாயு தொல்லை தரக்கூடிய உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

*புரோட்டீன்கள்

புரோட்டீன் சத்து அதிகமுள்ள முட்டை, மீன், கோழி இறைச்சி, பாலில் செய்யப்பட்ட உணவு வகைகள், கடலை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை எளிதில் ஜீரணமாகக் கூடியவை. மீன் ஒமேகா-3 என்கின்ற கொழுப்பு அமிலத்தையும், முட்டையானது துத்தநாகத்தையும் கொடுத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

*வைட்டமின்-சி

வைட்டமின்-சி அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வந்த புண்ணில் இருந்து மீண்டு வர உதவுகிறது. வைட்டமின்-சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*இரும்பு சத்து

இரும்புச்சத்தானது ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்துக் கொள்வதற்கும் பிரசவத்தின் போது இழந்த இரத்தத்தை திரும்பப் பெறுவதற்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் இது உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள முட்டையின் கரு, மாட்டின் கல்லீரல், உலர்ந்த பழங்கள், சிவப்பு இறைச்சி, அத்திப்பழம் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*கால்சியம்

கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. கால்சியத்தை பெறுவதற்கு பால், வெண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*நார்ச்சத்து

அறுவை சிகிச்சை முடிந்த பின் மலச்சிக்கலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. அல்லது இது காயம்பட்ட இடத்தில் அழுத்தத்தை கொடுத்து காயம் ஆறுவதை தடுக்கிறது. இதற்கு நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

*நீர்ச்சத்து

நீர் ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு முக்கியமானது. இது உடல் வறட்சியை போக்குவதோடு மட்டுமல்லாமல் குடல் அசைவை எளிதாக்கி காயத்திலிருந்து மீண்டு வர உதவுகிறது . தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. தேங்காய் தண்ணீர், மோர் போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த மற்ற நீர் ஆகாரங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*இதர உணவு வகைகள்

இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின்-பி6, வைட்டமின்-E, பொட்டாசியம், செலீனியம் போன்ற சத்துக்களை பெறலாம்.

பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஜீரணத்தை எளிதாக்க முடிகிறது. இது பிரசவத்திற்கு பிந்தைய உடல் எடை அதிகரிப்பை குறைக்கவும் பயன்படுகிறது.

பாதாமை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின்- பி12, காப்பர், கால்சியம் போன்ற சத்துக்களை பெறலாம். இது உடலை வலிமைப் படுத்துவதோடு அழகையும் அதிகரிக்கிறது.

புளியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் வீக்கத்தை குறைக்கலாம். இது உள் மற்றும் வெளி காயங்களை எளிதாக குணப்படுத்துகிறது.

பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்க உதவுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

அறுவை சிகிச்சைக்கு பின் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருப்பதால் எல்லா வகையான கொழுப்பு மற்றும் குப்பை உணவு (Junk Food) வகைகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம்.

காரமான உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலம் இரைப்பை சம்பந்தமான பிரச்சனைகள் உருவாவதை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் குழந்தைக்கு கொடுக்கும் பாலில் காரம் சேர்ந்து கொள்ளாமல் தடுக்கலாம்.

கார்பனூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது. இதன்மூலம் வாயுத் தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

 

 

சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை போன்றவைகளை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது.

காபி, டீ போன்றவைகளையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகபடியான காப்ஃபைன் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

ஆல்கஹாலில் இருந்து விலகி இருப்பது அத்தியாவசியமானது. இது பால் சுரக்கும் தன்மையை பாதித்து குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும்.

எளிதில் சீரணமாகாத உணவுகளான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.

அறுவை சிகிச்சை முடிந்த முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது

குளிர்ச்சியான உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது அத்தியாவசியமானது. ஏனெனில் ஜலதோஷத்துக்கு எடுக்கும் மருந்து தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கும் பாலில் கலக்க வாய்ப்புள்ளது.

நினைவில் கொள்ள வேண்டியவை

சாப்பிடும் உணவை ஒரே நேரத்தில் சேர்த்து எடுத்துக் கொள்ளாமல் நான்கு அல்லது ஐந்து வேளைகளாக உண்பது நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கும் இரண்டு மணி நேரம் இடைவேளை எடுத்துக்கொள்வது நல்லது. அதற்கு முன்னே பசி ஏற்பட்டால் பழங்கள் போன்றவற்றை சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்

புதிதாக பிறந்த குழந்தையை பராமரித்துக் கொள்ள வேணடியிருப்பதால் தூங்குவதற்கு நேரம் கிடைப்பது அரிது. ஆனால் கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தூக்கமானது காயத்தில் இருந்து எளிதில் மீண்டு வர உதவும்.

வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நம்மையும் நம் உடலையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon