பொதுவாக பெரிய ஹீரோக்களின் படத்திற்கு பெயர் வைப்பதில் தொடங்கி ரிலீஸ் தேதி வரை பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் வாடிக்கையாக மாறிவிட்டது. அதுவும் தலைவாவில் தொடங்கி, விஸ்வரூபம் எடுத்த இப்பிரச்சனைகள் இன்றுவரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் காரணம் உண்மையான பிரச்சனைகளா? இல்லை, பிரச்சனைகளாக உருமாறும் மாய பிம்பங்களா என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் விட்ட அடுத்த நாளே இது என்னோட டைட்டில் என கொடி பிடித்து கிளம்பிவிடுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், டைட்டில் பதிவு என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது தான். டைட்டில் பதிவு என்பது யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை தந்து முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஆனதால், இது ஒரு டிரென்டிங்காகவே இன்று வரை போய் கொண்டிருக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக மட்டும் பார்க்கப்படுகிறது.
முதன்முதலில் துப்பாக்கி திரைப்படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையை படக்குழு சந்தித்தது. அதன்பின்னர் இதுபோல் பல பிரச்சனைகள் வழக்குகள் வந்து கொண்டும் போய் கொண்டும் தான் இருக்கிறது.
இப்படி ஒரு புறம் செல்ல, திரைப்பட நடிகர்களின் அரசியல் ஆர்வம் அதனால் ஏற்படும் வெறுப்பாக மாறி பல்வேறு சிக்கல்களை உண்டாக்க தொடங்கிவிட்டது. அப்படி அரசியல் ஈடுபாடுடன் வாழும் ஒருவர் தான் நம்ம சூப்பர் ஸ்டார். இவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என ஏங்கியவர்கள் எல்லாம் இது வெறும் மாயை என மனம் மாறி போனாலும், இன்றும் அரசியலுக்கு ரஜினி வந்தால் ஆதரவு உறுதி எனவும் அதற்கு ஈடுக்கொடுத்து அவருடைய ரசிகர்கள் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகாவில் காலா ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுப்பற்றி சூப்பர் ஸ்டார் கூறுகையில், "கர்நாடக மக்கள் காலா படத்தை காண விரும்புகின்றனர். எல்லா மொழி மக்களும் ஒன்றுபட்டு வாழும் ஒரு மாநிலம் தான் கர்நாடகா. அவர்கள் எல்லோருமே காலா பட ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். கர்நாடகா அரசு போதுமான பாதுகாப்பை தியேட்டர்களுக்கு வழங்கும் என நான் நம்புகிறேன்..." என நடிகர் ரஜினிகாந்த் திங்கட்கிழமை கூறினார்.
எது எப்படியோ! திரைப்பட ரிலீஸ் என்பது 20-20 மேட்ச் போலவே. எந்த நேரத்திலும் காலா படத்துக்கான எதிர்ப்பு முற்றிலும் நீங்குமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று உலக நாயகன் கமலஹாசன், கர்நாடக முதலமைச்சர் HD. குமாராசுவாமி அவர்களை சந்திக்க அனைவரும் காலா பற்றி தான் கமல் பேசியிருப்பார் என நினைத்தார்கள். ஆனால் முதலமைச்சர் சந்திப்பை தொடர்ந்து கமல் கூறுகையில், "இரு மாநிலத்துக்கும் இடையே ஏற்பட வேண்டிய நல்ல நட்பை நாடியே நான் முதலமைச்சர் அவர்களை சந்தித்தேன். காலா பட ரிலீஸ் எதிர்ப்பு பற்றி நாங்கள் எதுவும் பேசி கொள்ளவில்லை. அதைப்பற்றி பேச படக்குழுவும், விநியோகஸ்தர்களும் இருக்கின்றனர். நான் எதற்கு?" என சொல்ல, ஒரு பெரிய ஏமாற்றமாக மட்டுமே மற்றவர்களுக்கு இருந்தது.
கபாலியை இயக்கிய பா. ரஞ்சித் காலா படத்தை இயக்கியிருக்க இப்படத்தின் பாடல்களும், ட்ரைய்லரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பல்வேறு நிபந்தனைகளை ரஜினிக்கு சற்று முன் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒப்பு கொண்டால் மட்டுமே காலா கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிய வருகிறது.
காலா படம் வரும் 7ஆம் தேதி தடைகளை தகர்த்தெறிந்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெரிலைட் பிரச்சனைக்கு காரணம் சமூக விரோதிகள் தான் என ரஜினி நேர்பட பேசியதால் காலா ரிலீஸில் கடும் பரப்பரப்பு காணப்படுகிறது.
