Link copied!
Sign in / Sign up
2
Shares

ஆதாம் ஏவாள் வாழ்க்கையில் இவ்வளவு சுவாரஸ்யங்கள் இருந்ததா!

 உலகில் கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர்கள் ஆதாம், ஏவாள் என்பது காலங்காலமாக கிறிஸ்தவர்களால் நம்பப்பட்டு வரும் ஒரு கருத்து. கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது, கடவுள் நம்பிக்கை உடையோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர், பிற மதத்தினர் என அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான பெயராகவே ஆதாம் ஏவாள் என்பது காணப்பட்டாலும் அவர்களைப் பற்றிய பல தகவல்கள் நம்மில் பலருக்கு தெரியாது என்பதே உண்மை. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் (வேதாகமம்) மற்றும் பழைய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துஅவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்கள் கீழே.   

கடவுள் இவ்வுலகத்தைப் படைக்க ஆரம்பித்து இரவு, பகல், வானம், பழங்களை கொடுக்கக் கூடிய மரங்கள், புல், பூண்டுகள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், விலங்குகள், ஆறுகள், குளங்கள் என அனைத்தையும் முதல் 5 நாட்களில் படைக்கிறார்.

இவை அனைத்தையும் படைத்தபின் கடவுளுக்கு ஒரு எண்ணம். என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு உயிரினத்தைப் படைத்தால் என்ன என்று எண்ணிய அவர் மண்ணை எடுத்து அதை கொண்டு ஒரு மனிதனை உருவாக்குகிறார். அம்மனிதனுக்கு மூச்சை கொடுத்த அவர் அவனுக்கு ஆதாம் என்று பெயரிடுகிறார்.

பின்பு ஏதேன் என்னும் அழகிய தோட்டத்தை உருவாக்கி அந்த தோட்டத்திலே எல்லாவிதமான மரங்களையும் செடிகொடிகளையும் உருவாக்கி அந்தத் தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சம் என்னும் மரத்தை உருவாக்குகிறார். தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஆறுகளை உருவாக்கி தோட்டத்திலே ஆதாமை குடியமர்த்துகிறார்.

இவை அனைத்தையும் செய்த கடவுள் தான் படைத்த அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்கும் பெயரிடும் பொறுப்பை ஆதாமுக்கு கொடுத்ததாகவும் அந்த வேலையை அவன் செவ்வனே செய்து முடித்ததாகவும் வரலாறு கூறுகிறது.

ஆதாமை படைத்த கடவுள் தற்போது அவனுக்கு ஒரு துணையை படைக்க எண்ணுகிறார். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரச்செய்து அவனுடைய விலா எலும்பை எடுத்து அதற்கு சதையைக் கொடுத்து ஒரு பெண்ணை உருவாக்குகிறார். அப்பெண்ணுக்கு ஆதாம் ஏவாள் என்று பெயரிடுகிறார். ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாகவே காணப்பட்டனர். அவர்கள் கண்கள் கூட அடைக்கப்பட்ட தாகவே இருந்தது.

இவை அனைத்தையும் செய்து முடித்த பின்பு உலகத்திலே தான் படைத்த அத்தனை உயிரினங்களையும் பொருட்களையும் ஆளுகின்ற அதிகாரத்தை தான் படைத்த மனிதர்களான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்த கடவுள் அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார். இந்த தோட்டத்தில் இருக்கும் எல்லா மரங்களின் பழங்களையும் நீங்கள் சாப்பிடலாம் ஆனால் இந்தத் தோட்டத்தின் நடுவில் இருக்கும் ஜீவவிருட்சத்தின் பழங்களை நீங்கள் சாப்பிடக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

 

கடவுள் உருவாக்கிய உயிரினங்களில் பாம்பு மட்டும் தந்திரமாக காணப்பட்டது. அது ஏவாளைப் பார்த்து கடவுள் உங்களிடம் ஏதாவது ஒரு மரத்தின் பழத்தைச் சாப்பிடக்கூடாது என்று கூறினாரா என்று நயமாக கேட்டது. அதற்கு பதில் கூறிய ஏவாள் தோட்டத்தின் நடுவில் இருக்கும் ஜீவவிருட்சத்தின் பழத்தை மட்டும் நீங்கள் புசிக்க கூடாது என்று கடவுள் கூறியதாக பாம்பிடம் கூறுகிறார். அதைக் கேட்ட பாம்பு அந்த பழத்தை சாப்பிடும் படியாக ஏவாளை வற்புறுத்துகிறது. அதற்கு ஏவாள் அந்த பழத்தைச் சாப்பிட்டால் நீங்கள் செத்து விடுவீர்கள் என்று கடவுள் கூறியதாக கூறுகிறாள். அதற்கு அப்பாம்பு 'இல்லை இல்லை இந்த பழத்தை சாப்பிட்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் சாகவே மாட்டீர்கள்' என்று கூறி அவளின் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. ஏவாளும் அந்தப் பழத்தைப் பறித்து சாப்பிடுகிறாள். அந்த பழத்தை சாப்பிட்ட பின்பு அந்தப் பழமானது மிகவும் ருசியாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதை கண்டு அதைப் பறித்து தன் கணவனான ஆதாமுக்கும் கொடுக்கிறாள்.

அந்த பழத்தைச் சாப்பிட்டவுடன் அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. உடனே அவர்கள் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை அறிந்து அத்தி மரத்தினுடைய இலைகளால் தங்களுக்கு உடைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

அன்றைய தினம் குளிர்ச்சியான பகல் பொழுதில் கடவுள் தோட்டத்தில் உலாவும் சத்தத்தை கேட்டு ஆதாமும் ஏவாளும் தாங்கள் செய்த தவறுக்கு பயந்து மரங்களின் பின் மறைந்து கொண்டார்கள். அப்பொழுது கடவுள் அவர்களைப் பார்த்து ஏன் என்னை பார்த்தவுடன் மறைந்து கொள்ளுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆதாம் நாங்கள் நிர்வாணமாய் இருக்கிறோம். உமது சத்தத்தை கேட்டு மறைந்து கொண்டோம் என்று கூறினார். அதற்குக் கடவுள் அவர்களைப் பார்த்து நான் சாப்பிடக் கூடாது என்று உங்களிடம் சொன்ன பழத்தை நீங்கள் சாப்பிட்டதன் காரணம் என்ன என்று கேட்டார் அதைக்கேட்ட ஆதாம்., ஏவாள் தான் எனக்கு அதைக் கொடுத்தாள் என்று தன் மனைவி ஏவாளைக் கடவுளிடம் காட்டிக் கொடுத்தான்.

ஏவாளிடம் நீ ஏன் இப்படி செய்தாய் என்று கடவுள் கேட்க ஏவாள் பாம்பு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறாள். இதைக் கேட்டு கோபமடைந்த கடவுள் பாம்பு மற்றும் ஆதாம், ஏவாளுக்கு சாபத்தை கொடுக்கிறார்.

பாம்பை பார்த்து நீ உயிரோடிருக்கும் வரை உன் வயிற்றினால் தான் நீ நகர்ந்து செல்ல முடியும். நீ மண்ணை தான் உணவாக உண்பாய் என்று சாபம் கொடுத்தார்,

ஏவாளை பார்த்து நீ கர்ப்பமாக இருக்கும் போது உன் வேதனை அதிகமாக இருக்கும். மிகவும் வேதனையோடு குழந்தையைப் பெறுவாய் என்று சாபமிட்டார். பின்பு அவர் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டி விட்டு சுடரொளி பட்டயத்தைக் காவலாக வைத்தார்.

அதற்குப் பின்பு ஏவாளோடு வாழத் தொடங்கிய ஆதாமுக்கு 130 ஆவது வயதில் சேத் என்னும் மகன் பிறந்ததாக வரலாறு கூறுகிறது. அதற்குப் பின்பும் 800 வருடம் உயிரோடு இருந்த ஆதாம் பல குழந்தைகளைப் பெற்று தொள்ளாயிரத்து முப்பதாவது வயதில் மரணமடைந்தார். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon